
நாளை சனிக்கிழமை மஞ்சள் மேலங்கி போராளிகள் தலைநகரை முடக்க திட்டமிட்டுள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் நவம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த மஞ்சள் மேலங்கி போராட்டம், நாளை சனிக்கிழமையோடு 45 ஆவது வாரத்தை எட்டியுள்ளது.
கடந்த சில மாதங்களாக ஆர்ப்பாட்டம் நலிவடைந்த நிலையில் காணப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், சென்ற வாரத்துடன் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
அதைத் தொடர்ந்து, நாளை சனிக்கிழமை பரிசை முற்றாக முடக்க போராளிகள் திட்டமிட்டுள்ளனர்.
காலை 10:00 மணிக்கு Champs-Elysées பகுதியை முடக்க திட்டம் வகுத்துள்ளனர். இங்கு குறைந்தது ஐந்தாயிரம் பேராவது கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தவிர பலத்த வன்முறை வெடிக்கும் வாய்ப்பு உள்ளதால் பரிசில் 5,000 காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
பத்து மாதங்களாக நாங்கள் சமூக அநீதியை எதிர்த்து போராடி வருகின்றோம். ஆனால் அரசு எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. அதனால் மீண்டும் அவர்களுக்கு கேட்கும்படி உரக்கச் சொல்வோம்! என மஞ்சள் மேலங்கி போராளிகள் சமூகவலைத்தளமூடாக அழைப்பு விடுத்துள்ளனர்.