கோட்டாவிற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் சுபநேரமான நண்பகல் 12.14 மணிக்குக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது என புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ உட்பட மஹிந்த அணியின் முக்கியஸ்தர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் ஒக்டோபர் 6ஆம் திகதி மதியம் 12 மணிவரை கட்டுப்பணம் செலுத்த முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 50 ஆயிரம் ரூபாவையும், சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில் 75 ஆயிரம் ரூபாவையும் கட்டுப்பணமாக தேர்தல்கள் செயலகத்தில் செலுத்த வேண்டும்.
இதுவரையில் நான்கு பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
அதேவேளை, ஒக்டோபர் 7ஆம் திகதி , வேட்புமனுத் தாக்கல் இடம்பெறும். அன்று காலை 9 மணிக்கும் 11 மணிக்கும் இடையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: ஈழவன்