தீக்காயத்தால் குடும்பஸ்தர் உயிரிழப்பு – மரணத்தில் சந்தேகம்

நண்பர்களுடன் உறங்கி கொண்டிருந்த போது தீ விபத்து இடம்பெற்றதாக கூறி கடந்த ஜூலை மாதம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர், இரண்டு மாதங்களின் பின்னர்  நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக, பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிகண்டி குடத்தணை பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு சூரியகுமார் வயது(34) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவர் ஆவார்.

கடந்த ஜூலை மாதம் 27ஆம் திகதி சக நண்பர்களுடன் மதுபோதையில் வீட்டுக்கு வந்த குடும்பஸ்தர் நண்பர்களுக்கு உணவு வழங்குமாறு வேண்டி மனைவியுடன் சண்டை பிடித்துள்ளார்.

இரவு உணவு உண்டுவிட்டு வெளிவிறாந்தியில் சக நண்பர்கள் சகிதம் குடும்பஸ்தர் உறங்கியதாக தெரிவிக்கப்பட்டது. அந்நிலையில், நள்ளிரவு 12:00 மணிபோல் வெளியில் சத்தம் கேட்டு  மனைவி எழுந்து பார்த்த போது சூரியகுமார் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சக நண்பர்கள் சகிதம் கிணற்றடியில் நின்று உள்ளார்.

உடனடியாக மனைவி கணவனை அழைத்து பருத்துறை ஆதாரவைத்தியசாலையில் சேர்ப்பித்திருந்தார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

கடந்த இரண்டு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சூரியகுமார் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். கணவன் உயிரிழந்தமை கொலை முயற்சி என்றும் இதற்கு சக நண்பர்களே காரணமாக இருக்கலாம் என மனைவி இறப்பு விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

அதேவேளை இறந்த குடும்பஸ்தரின் தந்தை மகனின் உயிரிழப்பு திட்டமிட்ட ஒன்று எனவும், மனைவியும் சக நண்பர்களுமே காரணம் எனவும் அவரது  தந்தை தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டில் நுளம்பு திரி இல்லாத நிலையில் நுளம்பு திரி பற்றியதாலே தீக்காயம் ஏற்பட்டதாக உயிரிழப்புக்கு முன்னர் கணவன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் கூறி இருந்ததுடன், தான் கூறியவாறே கூறுமாறு மனைவிக்கும் கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பருத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Recommended For You

About the Author: ஈழவன்