
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரர் அகில தனஞ்சயவிற்கு, பந்துவீசுவதற்கு 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதம் காலியில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் சந்தேகம் நிலவுவதாக நடுவர்கள் குற்றம் சுமத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அகில தனஞ்சயவிற்கு 14 நாட்களுக்குள் பந்துவீச்சு நிலைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென இலங்கை கிரிக்கெட் சபைக்கு, சர்வதேச கிரிக்கெட் சபை உத்தரவிட்டது.
இதனையடுத்து, அகில தனஞ்சய பந்துவீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில் அவர் சர்வதேச கிரிக்கெட் விதிகளுக்கு மாறாக பந்து வீசுவது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு ஒரு வருடம் பந்துவீசுவதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக அகில தனஞ்சயவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோட்டியில் தான், நியூஸிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சனின் பந்து வீச்சு முறைமையிலும் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
25 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய, இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு காலி மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், அனுமதிக்கப்பட்ட 15 பாகை கோண அளவினை விட நீண்ட கோணத்தில் பந்துவீசுவது கண்டறியப்பட்டது.
இதனால், அவருக்கு சர்வதேசப் போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டது. இதன்பிறகு அவுஸ்ரேலியாவில் அவரின் பந்து வீச்சு முறைமை பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.
பின்னர், அவர் தனது பந்து வீச்சு முறைமையை மாற்றியதால், மீண்டும் சர்வதேச போட்டிகளில் பந்து வீச அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் மீண்டும் ஒரு வருட தடைக்கு உள்ளாகியுள்ளார்.