இலங்கை அணிக்கு உயர் பாதுகாப்பு வழங்கவுள்ள பாகிஸ்தான்.

தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் சென்று விளையாட தயக்கம் காட்டிய, இலங்கை கிரிக்கெட் அணி, தற்போது அங்கு பாதுகாப்பு நிலைமைகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு சென்று விளையாட ஒப்புக் கொண்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி, இந்த மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் மற்றும் ரி20 தொடரில் விளையாட இருந்தது.

எனினும், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, இலங்கை கிரிக்கெட் அணியின் 10 முன்னணி வீரர்கள் இத்தொடரிலிருந்து விலக, இளம் வீரர்களை கொண்ட அணியினை பாகிஸ்தானுக்கு அனுப்ப, இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்தது.

இதற்கிடையில், கடந்த வாரம், இலங்கை கிரிக்கெட் சபையிடம் இலங்கையின் பிரதமர் அலுவலகம் பாகிஸ்தான் செல்லவுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரித்திருந்தது.

இந்த எச்சரிக்கையினை அடுத்து இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கை கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை மீள் பரிசீலனை செய்வதாக தெரிவித்திருந்தது.

அதன்படி, இலங்கையில் இருந்து பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகளை அறிவதற்காக ஒரு விஷேட குழு இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் அனுப்பப்பட்டிருந்தது. குறித்த குழு வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகள் சிறப்பாக இருக்கின்றது என்பது உறுதி செய்யப்பட்டு இலங்கை கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணமும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தமது நாட்டுக்கு வரும் இலங்கை அணி வீரர்களுக்கு தேசிய தலைவர்கள் தங்களது நாட்டுக்கு வரும் போது வழங்கப்படும் அதே உயரிய பாதுகாப்பை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கை அணி, இன்னும் சில நாட்களில் பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளது. இரு அணிகளுக்கிடையில் நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இரண்டாவது போட்டி 29ஆம் திகதியும், மூன்றாவது போட்டி ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. குறித்த மூன்று போட்டிகளும் கராச்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள ரி-20 தொடரின் முதல் போட்டி, ஓக்டோபர் மாதம் 5ஆம் திகதியும், இரண்டாவது போட்டி ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதியும், மூன்றாவது போட்டி ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. குறித்த மூன்று போட்டிகளும் லாஹூர் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

இலங்கை அணியின் சுற்றுப் பயணம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் நான்கு வருடங்களின் பின்னர் பாகிஸ்தானில் முழுமையான ஒருநாள் மற்றும் ரி-20 தொடர்கள் நடைபெறவுள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் விலகியிருப்பதால், ஒருநாள் தொடருக்கு லஹிரு திரிமான்னவும், ரி-20 அணிக்கு தசுன் ஷானக்கவும் தலைமை தாங்கவுள்ளனர்.

இத்தொடருக்கான பாகிஸ்தான் அணி, இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில். இரு தொடர்களுக்குமான பாகிஸ்தான் அணி இம்மாதம் 23ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் ஆறு வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஆறு பாகிஸ்தான் பொலிஸார் மற்றும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இதனால், பாகிஸ்தானிற்கு சென்று விளையாட சர்வதேச அணிகள் தயக்கம் காட்டின. ஆனாலும் கடும் முயற்சிகளை மேற்கொண்ட பாகிஸ்தான், 2015ஆம் ஆண்டு சிம்பாப்வேயை பாகிஸ்தான் வரவழைத்து கிரிக்கெட் தொடரிலும் விளையாடி, வீரர்களுக்கு பணப்பரிசினையும் பரிசளித்தது.

இதன்பிறகு, 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரண்டாம் நிலை இலங்கை அணி பாகிஸ்தானில் ஒரேயொரு ரி-20 போட்டியில் விளையாடியது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐ.சி.சி. உலக பதினொருவர் அணி மற்றும் மேற்கிந்திய தீவுகளும் பாகிஸ்தானில் குறுகிய கால ரி-20 சர்வதேச தொடர்களில் விளையாடின.

இவ்வாறான கடுமையான முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்ட போதும், பாகிஸ்தான் மீது நம்பிக்கையில்லாத சர்வதேச அணிகள், அங்கு சென்று விளையாட, தொடர்ந்தும் தயக்கம் காட்டின.

ஆனால், உலகளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தானுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தற்போது பாகிஸ்தான் சென்று, இலங்கை அணி விளையாடவுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்