ஆய்வுக் கூட்டங்கள்: பன்வாரி பாணியில் ஆளுநர் தமிழிசை!!

தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அரசுத் துறைகளின் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தியது போல, தெலங்கானா மாநிலத்தின் முதல் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசையும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்த இருக்கிறார் என்று தெலங்கானா அரசியல் வட்டாரம் பரபரப்பாகியிருக்கிறது.

தமிழக பாஜக தலைவராக இருந்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சௌந்தர் ராஜன், கடந்த 8 ஆம் தேதி ஹைதரபாத்தில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார்.

அவர் ஆளுநராகி ஒரு வாரமே ஆன நிலையில் தெலங்கானா மாநில அரசின் துறைகளில் நடக்கும் திட்டங்கள் பற்றி ஆய்வுக் கூட்டங்களை நடத்திட தயாராகிக் கொண்டிருக்கிறார்.
இதுதான் இப்போது தெலங்கானா அரசியல் வட்டாரங்களிலும், விவாதமாகியிருக்கிறது.

”தெலங்கானா சட்டமன்றத்தில் சில அமைச்சர்கள் லாபியில் பேசிக் கொண்டிருக்கும்போது தங்கள் துறைகளுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்த இருப்பதாக வாய்வழித் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்கள்.

குறிப்பாக சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளைத்தான் ஆளுநர் தமிழிசை தனது ஆய்வுப் பட்டியலில் முதன்மையான இடத்தில் வைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

குறிப்பாக அண்மைக் காலமாக தெலங்கானாவில் டெங்கு, மலேரியா, டைபாயிடு, வைரல் காய்ச்சல்கள் அதிக அளவு பரவி வருகின்றன. இதுபற்றி ஆளுநர் தமிழிசை கவலை அடைந்திருப்பதாகவும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் 18 ஆம் தேதி தெலங்கானா உள்துறை அமைச்சர் முகமது மஹ்மூது அலி காவல்துறை உயரதிகாரிகளோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் ஆளுநர் ஆய்வு பற்றி விவாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது” என்கிறார்கள் ஹைதராபாத் பத்திரிகையாளர்கள்.


Recommended For You

About the Author: Editor