மாணவன் படிப்பை நிறுத்தினால் அரசுதான் காரணம்: கமல்ஹாசன்!

இனி எந்த மாணவன் படிப்பை நிறுத்தினாலும் அதற்கு அரசு கொண்டுவரும் பொதுத் தேர்வுதான் காரணம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால், சிறு குழந்தைகளுக்குப் பொதுத் தேர்வா என்று அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டுமென அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தப் பொதுத் தேர்வுக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று (செப்டம்பர் 18) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தும்பியின் வாலில் பாறைக்கல்லைக் கட்டி பறக்கவிடுவது எவ்வளவு கொடுமையோ அதைவிடக் கொடுமையானது, பத்து வயது பையன் மனத்தில் பொதுத் தேர்வு எனும் சுமையைக் கட்டிவைப்பது.

இந்தக் கல்வித் திட்டம் நமது குழந்தைகளுக்கு எதைச் சொல்லிக் கொடுக்கிறதோ இல்லையோ, மன அழுத்தத்தைச் சொல்லிக் கொடுக்கும். இந்தத் திட்டத்தால் தேர்வு விகிதம் அதிகமாகாது.

குழந்தைகளுக்கும், பெற்றோர்களும் தேர்வு பயம்தான் அதிகமாகும்” என்று எச்சரிக்கும் கமல்ஹாசன், சாதிகளாலும், மதங்களாலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைவிட, மதிப்பெண்களால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால்தாம் இப்போது பாதிப்பு அதிகமாக இருக்கப்போகிறது.

இந்த பாதிப்பு சமூகத்தில் எதிரொலிக்கும்போது, ஒரு குழந்தை இந்தச் சமூகத்தில் வாழத் தகுதியே இல்லையோ என்று தாழ்வுமனப்பான்மைக்குள் மூழ்கிப் போகும் என்றும் குறிப்பிடுகிறார்.

தான், எட்டாவதோடு படிப்பை நிறுத்தியதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளதாகவும், ஆனால், இனி எந்த ஒரு குழந்தைப் படிப்பை நிறுத்தினாலும் அதற்கு அரசு அமல்படுத்தியிருக்கும் பொதுத் தேர்வு முறைதான் காரணமாக இருக்கும் என்று குற்றம்சாட்டும் கமல்ஹாசன், “குழந்தைகளின் எதிர்காலத்துக்கு எள்ளவும் பயன்தராத புதிய கல்வித் திட்டத்தை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அந்தத் திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார், அதற்குப் பதிலாக, பள்ளிக் கட்டடங்களை மேம்படுத்துவதிலும், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதிலும் கவனத்தைச் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது


Recommended For You

About the Author: Editor