நீடிக்கப்பட்டது நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லை!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதன்போதே அதன் கால எல்லையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு முன்னர் குறித்த தெரிவுக்குழுவின் கால எல்லையை எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்றம் அனுமதி வழங்கிருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் காரணமாக 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.

இதனையடுத்து தாக்குதல்கள் குறித்து ஆராய பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கடந்த மே மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் இராணுவத்தளபதி உள்ளிட்ட 20 இற்கும் மேற்பட்டோர் இதுவரையில் சாட்சியம் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor