மொழிப் பன்முகத்தன்மைக்காக தென்னகத்தில் முழக்கம்!!

இந்தியை இந்தியாவின் பொதுமொழியாக்குவது பற்றி நாடு முழுவதிலுமிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

தற்போது அந்நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் நடப்பிலுள்ள மும்மொழிக்கொள்கையில் (ஆங்கிலம், இந்தி, அவரவர் தாய்மொழி) மாற்றங்கள் செய்யப்படக் கூடாது என்று காங்கிரஸ் கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தது.

இதனை வலியுறுத்தும் விதமாக அக்கட்சியின் முன்னையத் தலைவர் ராகுல் காந்தி, மொழியில் இந்தியாவுக்கு உள்ள பன்முகத்தன்மை பலவீனமல்ல என்று கூறும் டுவிட்டர் பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டார்.

தென்னகத்தை ஒன்றிணைக்கும் எதிர்ப்பு

ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிக்கொள்கையை மட்டுமே தமிழக அரசு பின்பற்றும் என்று அம்மாநிலத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெளிவாக எடுத்துரைத்திருப்பதாக மீன்பிடிப்புத் துறை அமைச்சர் கே. ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து கொந்தளித்த திமுக, மொழிப்போர் மீண்டும் மூளும் என எச்சரித்துள்ளது. திரு அமித் ஷாவின் கருத்து தேசிய ஒற்றுமைக்கும் நேர்மைக்கும் புறம்பானது என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் குறைகூறியுள்ளார்.

இந்தி மொழித் திணிப்பால் இந்தி பேசாத மக்களைக் கொண்ட மாநிலங்களில் பிரிவினைவாதம் அதிகரிக்கக்கூடும் என்று மக்களவை உறுப்பினரும் மதிமுக தலைவருமான வைகோ கூறியுள்ளார்.

பாஜகவின் நட்புக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸும் தமது கண்டனங்களை டுவிட்டரில் வெளியிட்டார்.

நியாயப்படுத்த முயலும் ஹெச் ராஜா

பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா, அமித் ஷா சொல்லவந்த கருத்து வேறு என்றும் அவர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

“தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள், பல்வேறு மொழிகள் இருந்தாலும் தாய்மொழிக்குத் தனிச் சிறப்பு உள்ளது என்றுதான் அமித்ஷா பேசினார்“ என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.


Recommended For You

About the Author: Editor