அபாயாவிற்கு நிரந்தர தீர்வு!

முஸ்லீம்களின் ஆடை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வினை அரசு பெற்றுத் தர வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார் .

நகரசபையின் 17 வது அமர்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பல்லின சமூகம் வாழும் இந்த நாட்டிலே ஆடை சுதந்திரம் என்பது சட்டத்தால் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருந்தாலும் ஆங்காங்கு சில கசப்பான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமானது சுற்றறிக்கை , வர்த்தமானி அறிவித்தல்கள் ஊடாக காலத்திற்கு காலம் தெளிவு படுத்தப்பட்டும் அதனை அறிந்திராத, அல்லது தவறான புரிதல்களைக் கொண்ட சில அதிகாரிகளினால் பாடசாலைகள், பரீட்சை மண்டபங்கள், வைத்திய சாலைகள் போன்ற இடங்களில் வேண்டுமென்றே முஸ்லீம் பெண்களும் மாணவிகளும் இன்னல்களுக்கு முகங்கொடுப்பதாகவும் அவர் சூட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக அவர்களின் மனோநிலைகளும் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இவ்வாறான பல அசௌகரியங்களுக்கு முஸ்லிம் பெண்கள் முகங்கொடுப்பதும் அவ்வப்போது ஆட்சியாளர்கள் தற்காலிக தீர்வு வழங்குவதும் தொடர்ந்த வண்ணமே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இனிமேலும் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படாதவாறு முஸ்லீம்கள் கலாச்சார ரீதியான ஆடை அணிவதில் இருக்கின்ற பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வினை பெற்றுத் தந்து அதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் ண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor