கால்பந்தாட்ட போட்டியில் முறுகல் – ஆறுபேர் வைத்திய சாலையில்

மாத்தளை பேர்னாட் அலுவிஹார விளையாட்டு மைதானத்தில், 15 ஆம் திகதி நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியின் போது ஏற்பட்ட கைகலப்பில், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள மூவரை, 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, மாத்தளை நீதவான் நீதிமன்றம், நேற்று (16) உத்தரவிடப்பட்டுள்ளது.

மாத்தளை நகர முதல்வரால் முதற்றடவையாக நடத்தப்பட்ட மேயர் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் போதே, முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றுப்போட்டியில், ஹிக்கொல்ல மாவத்தை கெமரோன் அணியும் உக்குவளை கோல்ட் அணியும் மோதிக்கொண்டன. இதன்போது கெமரோன் அணியின் வீரர் ஒருவருக்கு கால்முறிவு ஏற்பட்டதையடுத்து, இரண்டு அணியின் ஆதரவாளர்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் காயமடைந்த ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில்,  மாத்தளை ஹிக்கொல்ல பகுதியைச் சேர்ந்த மூவர் மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்