கொலை தீர்வு இல்லை..!

அண்மையில் கனடாவில் கொலை செய்யப்பட்ட பெண் கணவனை ஏமாற்றி விட்டார் என்றும் அதனால் அவரை கொலை செய்தமை சரியே என்று சிலர் விசாரிக்காமலே தீர்ப்பு எழுதுகின்றனர்.

அப் பெண் கணவனை ஏமாற்றினாரா என்பது தெரியவில்லை. ஏமாற்றியது உண்மைதான் என்று வைத்துக்கொண்டாலும் அதற்கு  கொலை தீர்வு இல்லை என்பதே எமது கருத்து ஆகும்.

சரி. இதேபோல் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று ஒரு பெண் கணவனை கொலை செய்தால் அதை இந்த சிலர் ஏற்றுக்கொள்வார்களா? ஏற்றுக்கொண்டால் ஆண்கள் தொகையில் பாதிப் பேராவது பெண்களால் கொல்லப்பட வேண்டும் என்பதையாவது இவர்கள் அறிவார்களா?

ஜரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பிரபல கோடீஸ்வரர்களை சில பெண்கள் காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்து அதன்பின் உடனடியாக விவாகரத்து பெற்று அந்த கோடீஸ்வரரின் சொத்தில் பெரும் பங்கைப் பெற்றுவிடுவார்கள்.

இவ்வாறான செய்திகள் அடிக்கடி பத்திரிகைகளில் நாம் காண்கிறோம். ஆனால் அந்த கோடீஸ்வரர்களில் ஒருவர்கூட ஏமாற்றிய மனைவியை கொலை செய்ததாக செய்தி வந்ததில்லை.

ஏனெனில் மனைவியை கொலை செய்வது  தவறு என்பது சமூகக் கருத்து மட்டுமல்ல சட்டப்படி குற்றம் என்பதால் 20 வருடம் சிறையில் இருக்க வேண்டி வரும் என்பதும்  அந்த கோடீஸ்வரர்களுக்கு நன்கு தெரியும்.

நான் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ஆயுள்தண்டனை பெற்றிருந்த ஒரு ஆசிரியருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஆசிரியர் என்பதால் கொலை செய்தது மட்டுமல்ல மனைவியையே கொலை செய்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அதனால், “என்ன நடந்தது? ஏன் இப்படி செய்தீர்கள்கள்? என்று அவரிடமே நேரில் கேட்டுவிட்டேன். அவரும் மனம் திறந்து என்னிடம் பேசினார்.

“ஒருநாள் நான் பாடசாலையில் படிப்பித்தக்கொண்டிருந்தபோது தன் உறவினர் சிலர் வந்து உடனடியாக தன்னை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்”.

“அங்கே என் மனைவியும் இன்னொருவரும் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தனர். இருவரும் தவறாக நடந்து கொண்டார்கள் என்றும் தாம் கையும் களவுமாக பிடித்துவிட்டோம் என்றும் அந்த உறவினர்கள் என்னிடம் கூறினார்கள்”

“மனைவி என்னை ஏமாற்றிவிட்டார் என்று கோபம் வந்தது. ஆனால் என்ன செய்வது என்று எனக்கு  தெரியவில்லை. ஊரே சுற்றி நின்று வேடிக்கை பார்க்குது. அந் நேரம் எனது உறவினர் ஒருவர் கையில் கத்தியை தந்து என் மனைவியை வெட்டிக் கொல்லும்படி கூறினார். நானும் வேறு வழியின்றி கொன்று விட்டேன்.”

நீங்கள் ஒரு ஆசிரியர். கொலை செய்வது தவறு என்று உங்களுக்கு தெரியும்தானே? எனவே கொலை செய்ய முடியாது என்று மறுத்திருக்கலாம் அல்லவா? என்று நான் அவரிடம் கேட்டேன்.

அதற்கு அவர் “ ஆம். மறுத்திருக்கலாம். ஆனால் அப்புறம் யாரும் என்னை ஆம்பிளையாக ஊரில் மதிக்கமாட்டார்களே? கிண்டல் பண்ணுவார்களே? என்றார்.

சரி. அப்படியென்றால் ஏன் அந்த தவறு செய்த ஆம்பிiளையைக் கொல்லவில்லை? என்று நான் கேட்டேன்.

“அவன் ஆம்பிளை அப்படித்தான் இருப்பான். பீ கண்ட இடத்தில் மிதிப்பான். தண்ணி கண்ட இடத்தில் கழுவுவான். பெண்கள்தான் ஒழுங்காக இருக்க வேண்டும்” என்றார். அவரது இந்த பதில் எனக்கு ஆச்சரியம் தரவில்லை. ஏனெனில் இது அவரது சமூகத்தின் கருத்து.

சரி. இந்த 14 வருட சிறைவாசத்தில் இப்போது என்ன உணருகிறீர்கள்? என்று அவரிடம் கேட்டேன்

“நான் தவறு செய்துவிட்டேன். என் தவறால் என் குழந்தைகள் தாயும் இன்றி தந்தையும் இன்றி நடுத் தெருவில் நிற்கிறார்கள். மனைவியை வெட்டிக் கொலை செய்யச் சொன்ன உறவினர்கள்கூட என் குழந்தைகளை கவனிக்கவில்லை” என்றார் கண்ணீருடன்.

அவர் நிறைய சொன்னார். பதிவக்காக தேவையானதை மட்டும் இங்கு தந்திருக்கிறேன்.

இந்த ஆசிரியர் போல் கனடாவில் மனைவியை கொலை செய்த அந்த கணவனும் நிச்சயம் தன் சிறைவாழ்வில் ஒருநாள் தன் தவறை உணருவார். ஆனால் அது காலம் கடந்த ஞானமாகவே அவருக்கு இருக்கும்.

எனவே தயவு செய்து சேர்ந்து வாழ முடியாவிட்டால் பிரிந்து வாழுங்கள். ஆனால் எந்த நிலையிலும் கொலை செய்ய முயலாதீர்கள். ஏனெனில் அது ஒருபோதும் தீர்வு இல்லை.


Recommended For You

About the Author: Editor