இந்தியா மென்போக்கில் இருந்து விலகவேண்டும்

இந்தியா தீர்வு ஒன்றினை கொண்டுவரும் என்று எமது மக்கள் திடமாக நம்புகின்றார்கள். இலங்கை இன பிரச்சினை தொடர்பில் இந்தியா இதுவரை கடைப்பிடித்து வரும் மென்போக்குநிலையில் இருந்து விலகி தமிழ் மக்களின் இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாக்கும் வகையில் துணிச்சலான நடவடிக்கைகளைத் தாமதம் இன்றி எடுக்க வேண்டும். என முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணை தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் கேட்டுள்ளாா்.

யாழில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் கூறுகையில்,

இலங்கையின் வரலாற்றுக் காலத்திற்கு முதலிலிருந்தே தமிழ் மக்கள், தம்மைத் தாமே ஆண்டு வந்து கொண்டிருந்த நிலைமை 16ஆம் நூற்றாண்டில் காலனியாதிக்கம் ஏற்படும் வரை நீடித்திருந்தது. பின்னர் சுமார் 450 வருட காலம் வெளிநாட்டவரின்
காலனி ஆட்சிநடைபெற்றது. 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தபோது ஒற்றையாட்சி நிர்வாக அலகின் கீழ் தமிழ் மக்களின் ஆட்சி அதிகாரங்கள் பறிபோயிருந்தன. இது சுதந்திரத்துக்கு முற்பட்ட வரலாறு.

பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள், எமது பிரச்சினைகளை நாமே தீர்க்கும், எமது பிரதேசங்களை நாமே அபிவிருத்தி செய்யும், எமது பாதுகாப்பைநாமே உறுதி செய்யும் அதிகாரம் அற்ற எமது நிலைமையைப் பயன்படுத்தி எமது இனத்தை ‘இன அழிப்புக்கு” உட்படுத்தி எமது தாயகமான வடக்கு – கிழக்கை ஆக்கிரமித்து தமிழ் தேசியத்தை அழிக்கும் பல்வேறுபட்ட உபாயங்களை, சட்டங்களைப் பயன்படுத்தியும் சட்டத்துக்கு புறம்பாகவும் மேற்கொண்டார்கள்.

அவற்றுக்கு எதிராக தமிழ் மக்கள் சுமார் 30 வருடகாலம் அகிம்சை வழியிலும் வேறு வழியின்றி மேலும் ஒரு 30 வருடகாலம் ஆயுதவழியிலும் போராடியமை சுதந்திரத்துக்குப் பிற்பட்ட வரலாறு. இனவழிப்பு பற்றிய ஐக்கிய நாடுகளின் ஒத்த உடன்படிக்கையானது

09.12.1948லேயே இன அழிப்புக்கு வரையறை கொடுத்திருந்தது. அதனை இலங்கை 1950ல் ஏற்றுக்கொண்டிருந்தது- அவையாவன

1. ஒரு மக்கட் கூட்டத்தின் உறுப்பினர்களைக் கொல்லுதல்.

2. ஒரு மக்கட் கூட்டத்தின் உறுப்பினர்களுக்கு மிக அபாயகரமான உடல் மற்றும் மனோரீதியான பாதிப்பை ஏற்படுத்துதல்.

3. வேண்டுமென்றே ஒரு மக்கட் கூட்ட உறுப்பினரின் பகுதியானதோ முழுமையானதோ பௌதிக அழிவைக் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபடல்.

4. ஒரு மக்கட் கூட்டத்தினுள் பிள்ளைகள் பிறக்காது செய்ய நடவடிக்கைகளில் ஈடுபடல். இனப்பெருக்க ஆற்றலை நீக்குவது இவற்றுள் ஒன்று.

5. ஒரு மக்கட் கூட்ட குழந்தைகளை இன்னொரு மக்கட் கூட்டத்திற்கு பலாத்காரமாக மாற்றுதல்

ஆகியனவே அவை.

ஆகவே இன அழிப்பு என்பது வெறும் கொல்லுதலைக் குறிக்கமாட்டாது. உடல், மனோரீதியான பாதிப்பு, பௌதிக அழிப்பு, இனப் பெருக்க ஆற்றலை பலாத்காரமாக நீக்குதல், குழந்தைகளைப் பலாத்காரமாக தமது குடும்பங்களில் இருந்து மாற்றுதல்
போன்ற பலவும் இன அழிப்பே.1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்ததற்கும் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைவதற்கும் இடைப்பட்ட காலத்தில் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வடிவங்களிலான இன அழிப்பு நடவடிக்கைகள் மூலம் பெரும் அளவில் எமது பாரம்பரிய நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. சிங்களக் குடியேற்றங்கள் மூலம் வடக்கு கிழக்கின் குடிசன பரம்பலில் திட்டமிட்ட மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான எமது மக்கள்அ நியாயமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். ஆயிரக்கணக்கான எமது பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். எமது பாரம்பரிய வரலாற்று, தொல்லியல், கலாசார சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இலட்சக் கணக்கான எமது மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்கின்றார்கள். பெருமளவில் எமது சொத்துக்கள் அழிக்கப்பட்டு பொருளாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது.
காலத்துக்கு காலம் ஏற்பட்ட வெளிநாட்டு தலையீடுகளாலோ, சமரச முயற்சிகளாலோ மனிதகுலத்துக்கு எதிரான இந்தக் குற்றங்களைத் தடுக்க முடியவில்லை. உலகின் கண்களுக்கு முன்பாக கொடூரமானதொரு சாட்சிகளில்லா சமர் நடத்தப்பட்டு மனித துன்பியல் நிகழ்வொன்று நிகழ்த்தப்பட்டு 2009 ஆம் ஆண்டு
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னணியில் இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் தொடர்பில் இலங்கை சர்வதேச ரீதியான ஒரு பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் எமக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகள் இங்கு தொடர்கின்றன.

வடக்கு கிழக்கில் எமது இனத்தின் இருப்பையும் அடையாளத்தையும் இல்லாமல் செய்யும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு இராணுவம், வன இலாகா, வன ஜீவராசிகள் திணைக்களம்,வீடமைப்பு அதிகார சபை, மகாவலி அதிகார சபை,
தொல்பொருள் ஆய்வுத்திணைக்களம் போன்ற “அரச இயந்திரத்தை” இன்று அரசாங்கம் முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றது. அரசாங்கம் தனது எல்லா திணைக்களங்களையும், அதிகார சபைகளையும் மிகவும் நுட்பமானமுறையில் எமக்கெதிராகப் பயன்படுத்தி வருகின்றது. இந்த அநியாயங்களையும் அடக்குமுறைகளையும் நாம் இனியும் அனுமதிக்க முடியாது.

அவ்வாறான அரச நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்று கூறியே இன்றைய ‘எழுக தமிழ்” நிகழ்வில் நாம் கிளர்ந்து நிற்கின்றோம். நாம் இன்று யாழ்.முற்றவெளியில் திரண்டு இருந்து உரிமைக்குரல் எழுப்பும் அதேவேளை எமது புலம் பெயர் உறவுகள் பல்வேறு நாடுகளிலும் சாமாந்திரமாக “எழுக தமிழ்” போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

எமது தமிழ் நாட்டு உறவுகள் எமதுபோராட்டங்களுக்கு தமது ஆதரவை வெளிப்படையாகத் தெரியப்படுத்தி வருகின்றார்கள். தமிழ்மக்கள் வடக்கு – கிழக்கு இணைந்த தமது தாயகத்தில் சுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில் இந்தியா தீர்வு ஒன்றினை கொண்டுவரும் என்று எமது மக்கள் திடமாக நம்புகின்றார்கள். இலங்கை இன பிரச்சினை தொடர்பில் இந்தியா இதுவரை கடைப்பிடித்து வரும் மென்போக்குநிலையில் இருந்து விலகி தமிழ் மக்களின் இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாக்கும் வகையில் துணிச்சலான நடவடிக்கைகளைத் தாமதம் இன்றி எடுக்க வேண்டும் என்று இந்த “எழுக தமிழ்” மூலம்நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தமது உரிமைகளை வலியுறுத்தி எமது மக்கள் மேற்கொள்ளும் இந்த போராட்டத்தின் முக்கியத்துவத்தை எவரும் குறைத்து மதிப்பிடவோ அல்லது புறந்தள்ளிவிடவோ முடியாது. எமது கோரிக்கைகள் யாவையென இங்கு இணைத்தலைவரால் வாசிக்கப்பட்டன. ஆறு விடயங்களுக்கு மேலதிகமாக இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டமாக அமைய வேண்டும். அடுத்து எமது பகுதிகளில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கு தென் இலங்கையில் இருப்பவர்களைதயவுசெய்து நியமிக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

யுத்தத்தினால் சின்னா பின்னமாகிப்போயுள்ள எமது பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்பி நாமும் உங்களைப்போன்று வளமான ஒரு வாழ்வில் ஈடுபடும் வகையில் ஒரு இடைக்கால விசேட பொருளாதார கட்டமைப்பை சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து உருவாக்குங்கள் என்றும் மத்தியஅரசாங்கங்களிடம் கேட்கின்றோம்.

எம்மை நாமே ஆட்சிசெய்து சுய கௌரவத்துடன் வாழ்வதற்கு எமக்கு இருக்கும் சுய நிர்ணய உரிமையினை ஏற்றுக்கொள்ளுங்கள் அங்கீகரியுங்கள் என்று எமது சிங்கள, முஸ்லிம்  சகோதரர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். எமது மக்கள் என்ன தீர்வினை விரும்புகின்றார்கள் என்பதை அவர்களின் கருத்தை அறியும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை எமது மக்கள் மத்தியில் நடத்தி முடிவு செய்யுங்கள் என்று அரசாங்கத்தைக் கேட்டு வைக்கின்றோம்.

சிங்கள சகோதரரும் தமிழ் மக்களும் இந்த நாட்டில் காலம் காலமாக உள்ளுர் சுதேச மக்களாகவாழ்ந்து வருபவர்கள். எமது சகோதர இனமான உங்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் நாம் என்றைக்கும் தடையாக இருந்ததில்லை.

நீங்களும் வாழவேண்டும் நாமும் வாழவேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். நீங்கள் தற்போது எமக்கு எதிராக மேற்கொண்டுவரும் எல்லா செயற்பாடுகளையும் நிறுத்தி எமது சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

அதேவேளை சர்வதேச சமூகத்திடம் நாம் வேண்டிக்கொள்வது யாதெனில் உலகத்தின் மூத்த இனங்களில் ஒன்றான எமது தமிழ் இனத்தின் இருப்பும் அடையாளமும் இலங்கைத் தீவில் பலதசாப்த கால இன முரண்பாடு காரணமாக இல்லாமல் போகும் நிலைமை ஏற்பட்டிருப்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். ஆகவே தயவுசெய்து சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், கோட்பாடுகள்மற்றும் உடன்படிக்கைகளின் அடிப்படையில் உங்களுக்கு இருக்கும் தார்மீக கடப்பாட்டை உணர்ந்து செயற்படுங்கள் என்று நாம் உங்களிடம் கோருகின்றோம்.

இறுதி யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை ஐ.நா. மனித உரிமைகள் சபையினூடாக ஒரு பொறுப்பு கூறல் பொறிமுறைக்கு உட்படுத்த சர்வதேச நாடுகள் மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வி கண்டுவிட்டன. நல்லெண்ண அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீது விதித்திருந்த வரிச் சலுகையை நீக்கியமை எந்தவிதத்திலும் மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தை மாற்றவில்லை என்பதை உலகம் உணர்ந்துகொள்ள வேண்டும். இறுதி யுத்தத்தில் மிகமோசமான போர்க்குற்றம் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரானகுற்றங்களை இழைத்ததாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமித்துள்ளமை எந்த அளவுக்கு இலங்கை உலக அபிப்பிராயங்களை கணக்கில் எடுக்கின்றது  என்பதை எடுத்தியம்பும்.
அரசாங்கம் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றி தமிழ் மக்களையும் ஏமாற்றி இன அழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. எந்த அளவுக்கு நாம் எமதுமக்களையும், நிலங்களையும், பொருளாதாரத்தையும் இழந்திருக்கின்றோம், இழந்துவருகின்றோம் என்பதை நாம் நன்கு உணர்ந்தவர்களாகவே சர்வதேச நாடுகளின் உடனடியான தலையீட்டை இந்த “எழுக தமிழ்” நிகழ்வின் ஊடாகக் கோரி நிற்கின்றோம்.
எமது மக்கள் தமது அன்றாட நிகழ்வுகளை எல்லாம் கைவிட்டு வந்து, கடைகளை அடைத்து வைத்துவிட்டு வந்து இன்று இந்த “எழுக தமிழ்” நிகழ்வின் ஊடாக மேற்கொள்ளும் சாத்வீக போராட்டத்தின் செய்தியினை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகின்றோம்.
இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றதுக்கு கொண்டுசென்று கையாளுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்தவேண்டும். தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை ஒரு விசேட பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்றும் தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தும் வகையிலும் கண்காணிக்கும் வகையிலும் ஐ.நா. மனிதஉரிமைகள் உயர்ஸ்தானிகராலயம் வடக்கு கிழக்கில் தனது அலுவலகங்களை திறக்க வேண்டும் என்றும் இந்த “எழுக தமிழ்” நிகழ்வின் மூலம் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இலங்கை தீவில் ஒரு நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பக்கூடிய தீர்வு தொடர்பில் தமிழ் மக்களின் கருத்தை அறியும் வகையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கான முயற்சிகளையும் சர்வதேச சமூகம், சர்வதேச மனித உரிமைகள் சட்டக்கோட்பாடுகளுக்கு அமைவாக மேற்கொள்ளவேண்டும்.

அரசாங்கத்திற்கு ஒன்றை இறுதியாக கூறிவைக்கின்றேன். தமிழ்ப் பயங்கரவாதிகள் என்று எம்மிடையே எவரும் இல்லை. அரச பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களே எம்மிடையே உள்ளார்கள். எம் மக்களை மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் நபர்களுடன் முடிச்சுப் போடாதீர்கள். எமது இளைஞர்கள், யுவதிகள் மற்றோர் யாவரும் எமது விடுதலைக்காகப் போராடினார்கள்.

அரச பயங்கரவாதத்திற்கு ஈடுகொடுக்க ஆயுதம் ஏந்தியவர்களே எமது மக்கள்.  அவர்களுக்குப் பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தி அவர்களின் சுதந்திர வேட்கையைக் கொச்சைப்படுத்தியுள்ளன தொடர்ந்து வந்த மத்திய அரசாங்கங்கள். அவ்வாறு தொடர்ந்து செய்வதைத் தவிருங்கள் என்று அரசாங்கங்களுக்குக் கூறி வைக்கின்றேன்.
இளைஞர், யுவதிகள் ஆயுதமேந்த காரண கர்த்தாக்களாக இருந்தவர்கள் தொடர்ந்து வந்த சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்களே. இவற்றை எல்லாம் அலசி ஆராய்ந்து உண்மையை எமது சிங்களச் சகோதர சகோதரிகள் அறிந்து கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது.

சரித்திரத்தைத் திரித்து, உண்மையை மழுங்கடிக்கப் பண்ணி, பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று எம்மக்கள் மீது அநியாயமாகக் குற்றம் சுமத்தி சட்டத்திற்குப் புறம்பான சட்டங்கள் மூலம்தண்டித்த காலங்களை வெட்கத்துடன் நோக்க வேண்டிய தருணம்

தற்போது எமது சிங்கள சகோதர சகோதரிகளுக்கு வந்துள்ளது. இதுவரை காலமும் நடாத்தப்பட்ட பொய் சார்ந்த அரசியல் நடவடிக்கைகளை உணர்ந்து சகோதரர்களாக தமிழ் மக்களுக்கு விடிவு காலம் ஏற்படுத்த எமது சிங்கள சகோதர சகோதரிகள் முன்வர வேண்டும் என்றாா்.


Recommended For You

About the Author: ஈழவன்