இ.போ.ச ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் பயணிகள் அவதி

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள், நாடளாவிய ரீதியில் இன்று (16) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கமைய, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் இ.போ.ச பஸ் சேவைகள் முடங்கின.

ஸ்ரீ லங்கா சுதந்திர தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம், அகில இலங்கை மோட்டார் ஊழியர் சங்கம், இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர் சங்கம் ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் பெருந் தொகையான பயணிகள் பலத்த சிரமங்களை எதிர்நோக்கினர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம், தமது கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படும் வரை தொடரவுள்ளதாக, போக்குவரத்துச் சபை ஊழியர்கள் தெரிவித்தனர்.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் அக்கரைப்பற்று சாலையிலிருந்து தினமும் நாட்டின் நாலா பாகங்களுக்கும் சேவையில் ஈடுபட்டு வரும் சுமார் 25க்கும் மேற்பட்ட பஸ்கள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடவில்லை. அத்தோடு, இங்கு சேவையாற்றும் சுமார் 150க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் கடமைக்குச் சமுகமளிக்கவில்லை என சாலை முகாமையாளர் எம்.ஏ.இர்ஷாத் தெரிவித்தார்.

போக்குவரத்துச் சபை ஊழியர்களின் இப்பணிப் பகிஷ்கரிப்பால் பெருந்தொகையான பயணிகள், அக்கரைப்பற்று பஸ் தரிப்பு நிலையத்தில் நிறைந்து காணப்பட்டனர். நீண்ட தூரம் பயணிக்கும் மாணவர்கள், பெண்கள், வயோதிபர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர்.


Recommended For You

About the Author: Editor