சவூதி தாக்குதல் – பெற்றோலியம் விலையேற்றம்

சவூதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவு எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

சவூதி மீண்டும் எண்ணெய் உற்பத்தி தொடங்கும் வரை அமெரிக்காவின் எண்ணெய் சேமிப்பை வெளியிடுவதாக டிரம்ப் உறுதியளித்த பிறகு விலையில் சிறிது மாறுதல்கள் இருந்தன.

உலகளவில் சவூதிஅரேபியா மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக உள்ளது. நாள் ஒன்றுக்கு ஏழு மில்லியன் பேரல்களை அந்நாடு ஏற்றுமதி செய்கிறது.

தாக்கதலுக்கு பிறகு அரம்கோ எண்ணெய் நிறுவனத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் தினமும் 5.7 மில்லியன் பரல் கச்சா எண்ணெய் தயாரிப்பு பாதிக்கப்படும் என சவூதியின் ஆற்றல் துறை அமைச்சர் இளவரசர் அப்துலாசிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

இது சவூதிஅரேபியாவின் மொத்த உற்பத்தியில் பாதியளவாகும்.

அப்கைக் எனும் இடத்தில் அமைந்துள்ள அரம்கோ நிறுவனத்தின் மிகப்பரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றில் தாக்குதல் நடந்துள்ளது.

அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உலகின் பயன்பாட்டுக்கு தேவையான 7% பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியைச் சுத்திகரிக்கும் வசதி உள்ளது. குராய்ஸ் எண்ணெய் வயலில்தான் உலக அளவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்யில் 1% கிடைக்கிறது.

சவூதி அரேபியாவில்தான் உலகிற்குத் தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய் உற்பத்தி ஆகிறது. எனவே, இந்த தாக்குதலால் திங்களன்று எண்ணெய் விலையில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஈரான் ஆதரவு பெற்ற, ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா சிறிய விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ ஈரான் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இது ஏமனில் இருந்து நடத்தப்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஈரான் மறுக்கிறது.

அமெரிக்கா தங்கள் மீதும் வஞ்சம் வைத்தும் குற்றம் சுமத்துவதாகவும், “ஈரான் குற்றம் சுமத்துவதால் ஏமனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேரழிவு நின்றுவிடாது,” என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சரிஃப் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்