பாடசாலைகள் வடக்கில் வழமை போன்று இயங்கும்!!

வட மாகாணத்தில் நாளைய தினம் பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாளைய தினம்(திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் மூன்றாவது எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள குறித்த பேரணிக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், எழுக தமிழ் பேரணியை முன்னிட்டு தமிழர் தாயகப்பகுதிகளில் முழு கடையடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக பாடசாலைகள் நாளைய தினம் இயங்காது என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் வழமை போல இயங்கும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் நாளை இயங்காது என ஓர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவ்வாறான அறிவிப்புக்கள் எவையும் வெளியிடப்படவில்லை. எனவே, பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம்.

பாடசாலைகள், அரச திணைக்களங்கள் வழமை போலவே இயங்கும். குறிப்பாக பாடசாலைகள் அனைத்தும் இயங்கும்.

வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் கல்வி அமைச்சு தற்போது எனது ஆளுகையின் கீழ் உள்ளது. நானோ அல்லது கல்வி அமைச்சின் செயலரோ அவ்வாறான அறிவித்தல்கள் எதனையும் விடுக்கவில்லை’ என குறிப்பிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor