மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்!

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் மைதானத்தில் மாணவர்கள் பொலிஸாரினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், அங்கு நேற்று(சனிக்கிழமை) பெரும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய விளையாட்டு மைதானத்தில் திருகோணமலை இந்துக் கல்லூரிக்கும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும் கிரிக்கட் போட்டி நேற்று நடைபெற்றது.

இந்தப் போட்டியின்போது, மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை பாடசாலை மாணவர்கள் வெற்றிபெற்ற நிலையில், அந்த வெற்றியை கொண்டாடும் வகையில் மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், திருகோணமலை மாணவர்கள் சிலர் நேற்று கல்லடி பகுதியில் வைத்து தாக்கப்பட்டதாகவும், கிரிக்கட் போட்டியின்போதும் திருகோணமலை மாணவர்கள் சிலருக்கும் சிவானந்தா மாணவர்களுக்கு சிலருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே, மைதானத்திற்குள் நுழைந்த பொலிஸார் மைதான கதவுகளை அடைத்துவிட்டு மாணவர்களைத் தாக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்தோடு, மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.

இதனால், நேற்று இரவுவரை குறித்த பிரதேசத்தில் பதற்றமான நிலைமை நீடித்ததுடன், அதிபர் மற்றும் ஆசிரியர்களின் தலையீட்டினால் பதற்றம் தணிந்ததாகவும் கூறப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor