மீண்டும் சிறை சென்ற நளினி

லண்டனிலிருக்கும் மகள் வருகை தராதமையினால் அவரது திருமண ஏற்பாடுகள் எதனையும் மேற்கொள்ளாமல் ஏமாற்றத்துடன் சிறைக்கு செல்வதனால் நளினி மன வருத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 28 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி-முருகன் தம்பதியரின் மகளான ஹரித்ரா லண்டனில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு, திருமணம் செய்து வைக்கவே ஆறு மாதங்கள் பிணையில்  செல்வதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி அனுமதி  கோரியிருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், கடந்த ஜூலை 25 ஆம் திகதி சிறையிலிருந்து வெளியில்  செல்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

அதனடிப்படையில் வெளியில் வந்த நளினி, குறித்த காலப்பகுதியில் மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ளாதமையினால், தனது சட்டத்தரணியின் ஊடாக 1 மாதத்துக்கு பிணையை நீடிக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவினை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் மூன்று வாரங்களுக்கு பிணை நீடிக்கப்பட்டது.

இந்நிலையில் பிணை காலம் இன்றுடன்  நிறைவடைகின்றது. எனவே பிணையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கக்கோரி நளினி மீண்டும் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஆகையால் இன்று மாலைக்குள் நளினியை வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்ல பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்