வீதியில் போக்குவரத்து பொலிசாருடன் அடம்பிடித்த இளைஞன்!

வவுனியா நகரப்பகுதியில் போக்குவரத்து பொலிசாரின் நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்தியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, நகரப்பகுதியில் தமிழ் மத்திய மகாவித்தியாலயம் முன்பாக நேற்று இரவு 9 மணியளவில் போக்குவரத்து பொலிசார் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஏ9 வீதியால் வவுனியா நகரப்பகுதி நோக்கி வந்த முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து ஆவணங்களை பரிசீலித்த போது குறித்த முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் இருந்தவர்களில் ஒருவர் மதுபோதையில் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தாக்குதல் நடத்த முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த இளைஞரை பொலிசார் கைது செய்ய முற்பட்ட போது, போக்குவரத்து பொலிசாரும் இளைஞரும் வீதியில் கட்டிப் பிடித்து இழுபட்டனர்.

இந்நிலையில் அங்கு மேலதிக போக்குவரத்து பொலிசார் வரவழைக்கப்பட்டதுடன், சுமார் 10 இற்கும் மேற்பட்ட பொலிசார் இணைந்து குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

இதன்காரணமாக குறித்த பகுதியில் சுமார் அரைமணி நேரமாக பதற்ற நிலை காணப்பட்டதுடன், ஏ9 வீதிப் போக்குவரத்தும் இடையிடையே பாதிப்படைந்துள்ளது.

இதேவேளை, முச்சக்கர வண்டியில் பயணித்த தம் மீது பொலிசார் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியதாக குறித்த இளைஞனருடன் முச்சக்கரவண்டியில் பயணித்தவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor