தமிழகத்தை விட்டு செல்ல மறுத்த சிறுவர்கள்!

சென்னையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள் கொத்தடிமையாய் இருப்பதை கண்டுபிடித்த தமிழக போலீசார், அவர்களை மீட்டு கொல்கத்தாவிற்கு ரயிலில் அழைத்துச் சென்றனர்.
அப்போது எங்களை ஏன் மீட்டு அழைத்துச் செல்கிறீர்கள் என்று அவர்கள் போலீசாரிடம் கேள்வி எழுப்பினர்.
தமிழகத்தின் பல இடங்களில் டீ கடை முதல் ஸ்டார் ஹோட்டல் வரையிலும் வடமாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள், பெரியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வேலைபார்த்து வருகின்றனர். விவசாய வேலைகள் முதல் கட்டிட வேலைகள் வரையில் செய்துவருவதையும் பார்க்க முடிகிறது.
அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளமும் மிகச் சொற்பமே.
ஹோட்டல் மற்றும் கடைகளுக்கும் வடமாநில ஆட்கள் வேலைக்கு வேண்டும் என்றால் அவர்களை அழைத்து வர இடைத் தரகர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம் சொன்னால், பேக்கேஜ் முறையில் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு வடமாநிலங்களில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்துவருகிறார்கள்.
இந்த நிலையில் வடசென்னை பகுதிகளிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் நகைத் தொழில் செய்யும் இடங்களில் வடமாநிலங்கள், அதுவும் குறிப்பாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த குழந்தைகளை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து வேலைவாங்கி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்திருக்கிறது .
இதனையடுத்து, அப்பகுதிகளுக்கு விசிட் அடித்த தமிழக மகளிர் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்பு பிரிவு காவல் துறையினர், அங்கு கொத்தடிமையாக இருந்த சிறுவர்களை மீட்டனர். மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தால் மீட்கப்பட்டு காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த 60 சிறுவர்களை ஒன்றிணைத்தனர்.
இதனைத் தொடர்ந்து முத்தியால் பேட்டை இன்ஸ்பெக்டர் அப்துல் காதர், சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் மற்றும் 8 போலீசார் அடங்கிய டீமின் பாதுகாப்போடு 60 சிறுவர்களும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
திருச்சியிலிருந்து கல்கத்தாவிற்குச் செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு (செப்டம்பர் 13) 10.30 மணிக்கு எழும்பூரை வந்தடைந்தது. இதனையடுத்து, 12664 எண் கொண்ட தனிப்பெட்டியில் சிறுவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் ரயிலில் ஆட்டம், பாட்டம் என்று, ரயிலில் அங்கும் இங்கும் ஓடி விளையாடுவதால் 10 பேர் கொண்ட போலீஸ் டீமால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. இதில் மொழிப் பிரச்சினை வேறு இன்னும் சிக்கலாக இருக்கிறது.
அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக வேறு வழியின்றி, அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கி கொடுத்து பவ்யமாக அழைத்து செல்கின்றனர்.
இன்று காலை ஹவுரா எக்ஸ்பிரஸ் விசாகப்பட்டினம் சென்றுள்ளது. அங்கு அனைவருக்கும் மதிய உணவு கேட்க சப்பாத்தி, சப்ஜி, சாப்பாடு என விருப்பப்பட்டதை வாங்கிக் கொடுத்துப் பயணித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
எக்ஸ்பிரஸில் பயணிக்கும் சிறுவர்கள், “நாங்கள் விருப்பப்பட்டுத்தான் சென்னைக்கு வேலைக்கு வந்தோம். எங்கள் மாநிலத்தில் வேலையில்லை, வறுமை அதிகம் என்றுதான் இங்கே பிழைக்க வந்தோம்.
எங்களை ஏன் இப்படி கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கிறீர்கள். அசாம், ஒரிசா, பீகார் போன்ற மாநில சிறுவர்களும் வேலை செய்கிறார்களே… அவர்களை மட்டும் ஏன் விட்டுவிட்டீர்கள்” என்று கேள்வியாய் கேட்டிருக்கிறார்கள்.
அவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் உறங்குவது போல பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் போலீசார்.
இதில் அரசியலும் இருப்பதாக கொத்தடிமைகளுக்காக போராடும் சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். “மேற்கு வங்கத்தில் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை அதிகரித்ததால் குற்றச்செயல்கள் அதிகரிக்கும். இதனால் மம்தா ஆட்சிக்கு நெருக்கடி உருவாகும்.
இந்த உள்நோக்கத்துடன்தான் பாஜகவும், அதிமுகவும் திட்டமிட்டு மேற்குவங்கத்தினரை மட்டும் திருப்பி அனுப்புகின்றனர்” என்று அவர்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள்

Recommended For You

About the Author: Editor