சுவீகரிக்கப்பட்ட காணி தொடர்பில் ஆளுநரின் அறிவித்தல்!!..

வடக்கில் படைத்தரப்பு மற்றும் காவல்துறையினரால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆளுநரினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மீள் உரிமைகோரல் விண்ணப்பப்படிவங்கள் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படுவதாக ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் அடிப்படையில் அடுத்தகட்டமாக ஏனைய மாவட்டங்களிலும் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை காணிகளின் உரித்தாளர்கள் அறியத்தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களாயின் அவர்களும் தமது காணிகளை அடையாளப்படுத்துமாறும் வடமாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்காக தயாரிக்கப்பட்ட விசேட விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து உரிமைகோரலுக்கான தகுந்த ஆதாரத்துடன் அல்லது தகுந்த விளக்கத்துடன் மீளப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பப்படிவத்தினை ஆளுநர் செயலகம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் வடமாகாண சபையின்  np.gov.lk இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காணி உறுதியின் பிரதியுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை இணைத்து எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் ‘காணி கோரல் ‘ வட மாகாண ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor