சிதம்பரம் நடராஜர் கோயில் திருமணம்: சர்ச்சை

சிதம்பரம் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற திருமணத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் நடராஜர் கோயில் நிர்வாகத்தை மீட்டெடுத்துச் சரியானவர்கள் கையில் கொடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
2000 ஆண்டுகள் பழைமையான மற்றும் புகழ் பெற்ற சைவ திருத்தலங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோயிலில், உள்ள ஆயிரங்கால் மண்டபம் ராஜ சபை என்று அழைக்கப்படுகிறது, இக்கோயிலில் வழக்கமாக வடக்கு கோபுரம் அருகில் உள்ள பாண்டிய நாதர் சன்னிதியில்தான் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஆயிரங்கால் மண்டபமான ராஜ சபை, புனிதமான இடம் என்பதால் ஆன்மிக நிகழ்ச்சிகள் தவிர மற்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை.
நேற்று முன்தினம் (செப்டம்பர் 11) ஆயிரங்கால் மண்டபத்தில், சிவகாசி ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் பங்குதாரர் ராஜரத்தினம் பத்மா தம்பதியினர் இல்ல திருமண விழா நடைபெற்றிருக்கிறது.
இவர்களது மகளான சிவகாமிக்கும் சென்னை ரத்னா ஃபேன் ஹவுஸ் உரிமையாளர் சித்தார்த்தன் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
இதற்கான மின் விளக்குகள், மலர் தோரணைகள் என மண்டபம் முழுவதும் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. திருமணத்தை ஒட்டி வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
திருமண பேட்ஜ் அணிந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். விருந்தினர்கள் அமர்வதற்கு குஷன் சேர்களும் போடப்பட்டிருந்தன, திருமணம் முடிந்த பிறகு விருந்து உபசரிப்பும் நடைபெற்றிருக்கிறது.
ராஜரத்தினம் பத்மா தம்பதியினருக்கு நீண்ட நாட்கள் குழந்தை இல்லை என்றும் நடராஜர் கோயிலில் வேண்டிய பிறகே குழந்தை பிறந்ததாகவும், அதனால் அந்த கோயிலிலேயே திருமணம் நடத்த வேண்டும் என்று நினைத்து திருமணம் நடத்தியதாகவும் தெரிகிறது.
இதற்காகக் கோயில் தீட்சிதர்களிடம் அனுமதி கேட்டதாகவும், இதற்குப் பட்டு என்ற தீட்சிதர் அனுமதி வாங்கி கொடுத்ததாகவும், அனுமதி கிடைத்ததும் திருமணத்துக்கு முதல் நாள் ஆயிரம் கால் மண்டபத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டு, மறுநாள் நாள் காலை 7.30 மணியளவில் திருமணம் நடைபெற்றதாகத் தெரிகிறது.
ஆயிரம் கால் மண்டபத்தில் இதுவரை எந்த திருமணமும் நடைபெறாத நிலையில் பட்டாசுத் தொழிலதிபர் இல்ல திருமண விழா நடைபெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் மரபு மீறியிருப்பதாக பக்தர்கள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். ஆயிரம் கால் மண்டபத்தில் திருமணம் நடத்த யார் அனுமதி கொடுத்தது என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து பட்டு தீட்சிதர் ஊடகம் ஒன்றிடம் கூறுகையில், நடராஜர் சபை முன்புதான் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கோயில் வளாகத்தில் உள்ள சிறிய கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால்.
நாட்டிய நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆயிரம் கால் மண்டபத்தில் திருமணம் நடத்தப்பட்டது.
தவிர்க்க முடியாத காரணத்தால் தான் அங்கு திருமணம் நடத்தப்பட்டது. கோயிலில் கும்பாபிஷேகத்துக்கு வந்தவர்கள் உட்பட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது” என்று தெரிவித்திருக்கிறார்.
ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராமதாஸ், ”சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிகழ்த்தப்பட்ட அத்துமீறல் பற்றி விசாரணை நடத்தத் தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
அதுமட்டுமின்றி, காலம்காலமாக பிச்சாவரம் சோழர்கள் நிர்வாகத்தில் சிதம்பரம் நடராசர் கோயில் புகழ் பெற்று விளங்கியது என்பதால், அக்கோயிலைத் தமிழக அரசு கையகப்படுத்தி, அதை நிர்வகிக்க அமைக்கப்படும் அறங்காவலர் குழுவில் பிச்சாவரம் சோழர்களைச் சேர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்,

Recommended For You

About the Author: Editor