ட்ரம்ப் வடகொரிய தலைவரைச் சந்திக்கவுள்ளதாக அறிவிப்பு!!

அணுசக்தி மயமாக்கல் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் முகமாக வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த சந்திப்பு இடம்பெறும் என வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போது ட்ரம்ப் இதனை தெரிவித்தார்.

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இடையில் கடந்த ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாடு சந்திப்பு நடைபெற்றது.

இந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர் கிம்வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகள் சோதனைகளை நிறுத்தியதால், கொரிய தீபகற்பத்தில் நீண்டகாலமாக நீடித்து வந்த பதற்றம் தணிந்தது.

உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இந்த எதிர்பாராத சந்திப்பின்போது அணு ஆயுத ஒழிப்பு குறித்த இரு தரப்பு பேச்சுவார்த்தையை தொடர இருநாட்டு தலைவர்களும் உறுதி பூண்டனர்.

எனினும் அணு ஆயுத ஒழிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து பேசி முடிவு எடுப்பதற்காக இரு நாட்டு தலைவர்களும் கடந்த பெப்ரவரியில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் சந்தித்தனர். ஆனால் எதிர்பாராத வகையில் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் மீண்டும் விரிசல் உருவானது.

இதையடுத்து தொடர்ந்தும் வடகொரியா அணுவாயுத பரிசோதனைகளை நடத்தி அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்து வருகிறது. இதற்கிடையில் வடகொரியாவின் அண்மைகால ஏவுகணை சோதனைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக வடகொரியா அண்மையில் தெரிவித்தது.

அணு ஆயுத ஒழிப்பு குறித்து அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். இந்த பேச்சு வார்த்தை இந்த மாத இறுதியில் நடைபெற வேண்டும் எனவும் வடகொரியா குறிப்பிட்டிருந்தது.

ஒப்பந்தத்திற்கான நம்பிக்கையை உயிருடன் வைத்திருக்க அமெரிக்கா ஒரு புதிய அணுகுமுறையுடன் இந்த பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் எனவும் இரு தரப்பின் நலன்களுக்கு பலன் அளிக்கும் அடிப்படையில் அமெரிக்கா ஒரு மாற்று அணுகுமுறையை கொண்டு வரும் என்று நம்புவதாகவும் வடகொரியா தெரிவித்தது.

இவ்வாறான நிலையில் மீண்டும் வடகொரியாவுடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளமை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Recommended For You

About the Author: Editor