அரச அலுவலக பலகைகளில் ஹிந்தி அழிப்பு

திருச்சியின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரச அலுவலகவிளம்பரப் பலகைகளில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழித்த மர்ம நபர்கள் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்த கஸ்தூரி ரங்கன் அறிக்கை வெளியானதிலிருந்து ஹிந்தி எதிர்ப்பு குறித்த பிரசாரம் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு, “ஹிந்தி விருப்ப மொழியாக இருக்குமே தவிர, கட்டாயமாகத் திணிக்க மாட்டோம்”என அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருச்சி விமான நிலையம், தலைமை தபால் நிலையம் மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உட்பட பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் முன்பாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளில் இருந்த ஹிந்தி எழுத்துகளை, மர்ம நபர்கள் சிலர் நேற்று நள்ளிரவு கறுப்பு மை கொண்டு அளித்துள்ளனர்.

அந்தப் பலகையில் இருந்த ஆங்கில எழுத்துக்களை அழிக்காமல் விட்டுவிட்டனர். இது குறித்த தகவல்கள் வெளியானதிலிருந்து திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஹிந்தி எழுத்துகளை அளித்தவர்கள் குறித்து திருச்சி மாநகரம், திருச்சி விமான நிலையம் மற்றும் கன்டோன்மென்ட் பொலிஸார் தீவிரமாக விசாரித்துவருகிறார்கள்.

மத்திய அரசு அலுவலகங்களில் இருந்த ஹிந்தி எழுத்துகள் கறுப்பு மை மற்றும் தாரைப் பூசி மறைத்த சம்பவம், திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Recommended For You

About the Author: Editor