ஜப்பான் ஒலிம்பிக்கில் ஐஸ் மழை

ஜப்பானில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கோடை கால ஒலிம்பிக் மற்றும் கோடை கால பரா ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெறவுள்ளன.

இதற்கான விளையாட்டு அரங்குகளின் நிர்மாணப் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் காலப் பகுதியில் வெப்பத்தை தணிக்கும் வகையிலான முயற்சியை ஜப்பான் மேற்கொண்டுள்ளது.

அந்தவகையில், 2020 கோடை காலத்தில் விளையாட்டுக்கள் நடைபெறும் போது பார்வையாளர்களை குளிர்ச்சியாகவும் வசதியாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் செயற்கை பனிப்பொழிவை ஜப்பான் கையாளவுள்ளது.

இதனை ஒத்திகை பார்க்கும் வகையில், கடல் வன நீர்வழி அரங்கு ஒன்றில் சுமார் 300 கிலோ செயற்கை பனி தெளிக்கப்பட்டது.

டோக்கியோ வழக்கமாக ஜூலை மாதத்தில் 35செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படும். இதனால் ஒலிம்பிக் பார்வையாளர்கள் வெப்பநிலையால் பாதிக்கப்படுவர். இதனைக் கருத்திற் கொண்டு இந்த செயற்கை பனிப்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும், 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 9ஆம் திகதி வரை, ஜப்பானின் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

206 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரில், 33 விளையாட்டுகளில் இருந்து 339 விiளாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் 11,091 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு, இந்த ஒலிம்பிக் போட்டிகளில், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், கோடைக்கால ஒலிம்பிக் தொடரில், 7 புதிய விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்தவுள்ளன. இதனை சர்வதேச ஒலிம்பிக் குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.

அதேபோல், கோடைக்கால பரா ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டெம்பர் 6ஆம் திகதி வரை டோக்கியோவில் நடைபெறவுள்ளது

டோக்கியோவில் உள்ள புதிய தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த போட்டித் தொடரில், 22 விளையாட்டுக்களில் இருந்து 540 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுற்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்