அவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டா உள்ளிட்டோர் விடுதலை

இலஞ்ச ஊழல் ஆணைக் குழு தாக்கல் செய்த அவன் கார்ட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு நீதவான் நீதிமன்றிக்கு உத்தரவிட்டுள்ளது.

அவன்கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து செல்ல அனுமதியளித்ததன் ஊடாக அரசாங்கத்துக்கு 1,140 கோடி ரூபா நட்டதை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கினைஆட்சேபித்து கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மனுவின் கோரிக்கைகளை இன்று (வியாழக்கிழமை) ஏற்றுக்கொண்டுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அவ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமே இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் முன்னாள் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, ஆணைக் குழுவின் எழுத்து மூல அனுமதியைப் பெறாமலேயே தான் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், எனவே அப்படி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிவான் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை இரத்து செய்து தான் உள்ளிட்ட 8 பேரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்குமாறும் கோட்டாபய ராஜபக்ஷவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் இந்த உத்தர்வைப் பிறப்பித்தது.

எனினும் இலஞ்ச ஊழல் சட்டத்தின் 78 (1) ஆம் பிரிவின் கீழ் ஆணைக் குழுவின் எழுத்து மூல அனுமதியைப் பெற்றுக்கொண்டு, இந்த விவகாரத்தில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக புதிதாக வழக்கொன்றினை தாக்கல் செய்த எந்த தடையும் இல்லை என மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பில் சுட்டிக்கடடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்