பௌத்த பேரினவாதத்திற்கு சலுகை தமிழா்களுக்கு இல்லையா?

இந்த நாட்டில் ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காகவும், குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவும் முஸ்லீம்கள் மீதும், முஸ்லீம் தலைமைகள் மீதும் அழுத்தத்தைப் பிரையோகித்து அவர்களைப் பதவி நீக்கி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பௌத்த பேரினவாதத்திற்கு முடியுமானால்,

பத்து ஆண்டுகளுக்கு மேலாக அழுது கொண்டு, எமது உறவினர்களை தொலத்துவிட்டு ஏதிலிகளாக நாங்கள் திரிகின்றோம். இதற்கு ஏன் இன்னும் ஒரு தீர்வினை அரசு பெற்றுத்தரவில்லை என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாட்டுக்காக ஒன்றிணைவோம் இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன 08.06.2019இன்றைய தினம் முல்லைத்தீவிற்கு விஜயம் என்றை மேற்கொண்டிருந்தார்.இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்,

தமது உறவினர்கள் எங்கே என கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அங்கு காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். அவர்கள் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்றுடன் 824ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களான நாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.ஜனாதிபதியவர்களை ஏற்கனவே பலதடவைகள் நாம் சந்தித்தபோதும் எமக்கு சரியான பதில் வழங்கப்படவில்லை.

இன்றைய தினம் ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைதருகின்றபோது எங்களுடைய எதிர்ப்பை பதிவுசெய்வதற்காக இந்த கவனயீர்ப்பை இன்றைய நாள் முன்னெடுத்திருந்தோம்.ஜனாதிபதி அவர்களுடைய அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தோ அல்லது

அவருடைய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தோ இந்த கவனயீர்ப்பை முன்னெடுக்கவில்லை. எங்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்ஙவில்லை என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த கவனயீர்ப்பை செய்கின்றோம்.ஒவ்வொரு உறவினர்களும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வீதி வீதியாக

ஒவ்வொரு அமைச்சர்கள், தலைமை அமைச்சர், எங்களுடைய அரசியல் கட்சிகள், பொது நிறுவனங்கள், ஜனாதிபதி என அனைவரிடமும் மன்றாடி கேட்டு தெருவிலே அழுது புரண்டுகொண்டிருக்கின்றோம்.எங்களுக்கு சரியானதொரு தீர்வு வேண்டும். எங்களுக்கு நிச்சயமாக எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வேண்டும்.

எங்களுக்கான சரியான தீர்வு தராத பட்சத்தில் இந்தப் போராட்டத்தினை மாற்றி ஒவ்வொருவராக எங்களுடைய உயிரை மாய்ப்பதற்கு தயாராக இருக்கின்றோம். இது இறுதி எச்சரிக்கையாக இருக்கட்டும்.இந்த நாட்டில் ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காகவும், குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவும்

முஸ்லீம்கள் மீதும், முஸ்லீம் தலைமைகள் மீதும் அழுத்தத்தைப் பிரையோகித்து அவர்களைப் பதவி நீக்கி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பௌத்த பேரினவாதத்திற்கு முடியுமானால், உண்மையிலேயே தர்மத்தினைப் போதித்த புத்தருடைய கொள்கைகளைப் பின்பற்றுகின்ற இந்த அரசும்,

புத்த தேரர்களும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அழுது கொண்டு எமது உறவினர்களை தொலத்துவிட்டு ஏதிலிகளாக நாங்கள் திரிகின்றோம். இதற்கு ஒரு முடிவுகட்டுவத்கு அவர்களின் மனம் இடம்கொடுக்கவில்லை.நாங்கள் தமிழர்கள் என்பதற்காகவா,

இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகள் என்பதற்காகவா எங்களுடைய பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கவில்லை.சர்வதேசமே தயவுசெய்து எங்களைப் பாருங்கள். நாங்கள் இங்கு இறக்கும் நிலையில் இருப்பவர்கள்தான் இங்கு கூடுதலாக இருக்கின்றோம்.

ஒரு கணம், ஒரு நிமிடம் எங்களைப்பற்றிச் சிந்தியுங்கள். காணாமல் போனவர்களின் நிலை என்ன.

அவர்கள் எங்கே இருக்கின்றார்கள். பதில் எங்களுக்குத் தேவைப்படுகின்றது. அந்தப் பதிலின் ஊடாக நாங்கள் நின்மதியாக இறப்பதற்காவது வழிவிடுங்கள் என்று கோருகின்றோம். என்றனர்.மேலும் நாளை இலங்கைக்கு வருகைதரவுள்ள இந்தியப் பிரதமரும் தங்களுடைய விடயத்தில் கவனம் செலுத்த வேண்டு்ம்

எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor