எழுக தமிழுக்கு பல்கலை மாணவர்கள் ஆதரவு

எமது அரசியல் உரிமைகளினை வென்றெடுப்பதற்கு அரசியல் ரீதியாக ஈழத்தமிழர்களாகிய நாம் எம்மை பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. இன்று எமது பிரதிநிதித்துவ பலத்தை சிதறடிக்கின்ற வகையில் தமிழ்தேசிய பரப்பில் மூன்று தரப்புகளாக பிளவுபட்டு நிற்கின்றோம். உண்மையாக தேசியத்தை நேசிப்பவர்களாக இருந்தால் மூன்று தரப்புகளாய் பிளவுபட்டு நிற்கும் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட முடியும். இங்கு தமிழ் தேசியத்தின் நலனை விட கட்சிகளின் நலன்களே முதன்மை பெறுவதனாலேயே இத்தகைய பிளவுகள் ஏற்படுகின்றன. இன்றைய சூழலில் தேசியத்தை நேசிக்கும் தரப்புகள் ஒற்றுமைப்பட வேண்டியது மிக மிக அவசியமானதாகும் என யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

எழுக தமிழ் நிகழ்வை ஆதரித்து மாணவர் ஒன்றியம் விடுத்த அறிக்கையிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

தமிழ்த்தேசிய பரப்பில் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் வலுப்பெற வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும். யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது தமிழ்த் தேசிய உரிமைப்போரட்டத்திற்கு தன்னாலான பங்களிப்பை
என்றும் வழங்கி வென்றெடுப்பதற்கான காலத்தின் தேவை வழங்குகின்றோம். ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் எழுச்சி போராட்டமாகிய எழுக தமிழிற்கு காலத்தின் தேவை உணர்ந்து நாம் பூரண ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்குகிறோம்.

வரலாற்றில் இருந்து தமிழ் மக்கள் பாடம் கற்றுக்கொள்ள தவறியதன் விளைவாகவே இன்று வரையில் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றோம். தமிழ் மக்களின் பூர்வீக தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களையும், விகாரைகளையும் அமைக்கப்படுவதை தடுக்க முடியாமல் இருக்கிறோம்.
இதனை அறிந்து கொள்ளாதவர்களாய் கட்சிகளாக பிரிந்து நின்று அடிபடுவது ஆரோக்கியமானதா? எமதுஅரசியல் உரிமைகளினை வென்றெடுக்கும் வரையிலாவது குறைந்தபட்சம் நாம் போராட்ட களத்தில் என்றாலும் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது தமிழ் தேசியத்தை நேசிக்கும் எங்கள் ஒவ்வொவரினதும் தார்மீக கடமையாகும்.

தமிழ் மக்களின் கோரிக்கைகளினை வலுப்படுத்த எழுக தமிழ் போன்ற மக்கள் எழுச்சிப் போராட்டங்களும் தமிழ் மக்கள் பேரவை போன்றதான மக்கள் இயக்கம் என்பதுவும் காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது. தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்று வரையில் மக்கள் தாமாகவே முன்னெடுத்த தன்னெழுச்சி போராட்டங்களில் பேரவை எத்தகைய வகிபாகங்களினை கொண்டிருந்தது என்பது கேள்விக்குரிய ஓர் விடயமாக உள்ளது. அது மட்டுமன்றி இன்று பேரவை மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளில் இருந்து பேரவை மீண்டெழுவதற்கு தன்னை சுயவிமர்சனம் செய்து கொண்டு அதன் ஊடாக தன்னை மறுசீரமைத்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாய கடமையாகும். இதனை தமிழ் மக்கள் பேரவையினரும் ஏற்றுக்கொண்டு எழுக தமிழிற்கு பிற்பட்ட குறுகிய காலத்தில் மறுசீரமைப்பை மேற்கொள்வதாக அளித்த வாக்குறுதியின் மீது மாணவர் ஒன்றியம் நம்பிக்கை கொள்கின்றது.

தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளினை வென்றெடுக்கும் வரையிலாவது குறைந்தபட்சம் தமிழ் மக்களினை ஓரணியாக ஒன்றுதிரட்டி ஓர் குடையின் கீழ் வைத்திருக்க இன்றைய காலச் சூழலில் அரசியல் கட்சிகளினால் முடியாதுள்ளது.

விகாரைகள் நிலையில் நாம் எமக்குள் நாம் மாறாக அத்தகைய கடமையினை ஓர் மக்கள் இயக்கம் ஒன்றின் மூலமாகவே சாத்தியப்படுத்த முடியும். இத்தகையதொரு சூழலில் தான் மக்கள் இயக்கம் ஒன்றினை பலப்படுத்த வேண்டிய இக்கட்டான ஓர் காலகட்டத்தில் இன்று தமிழ் சமூகம் உள்ளது என்பதை மறுதலிக்க முடியாது.

நாம் எமது அரசியல் உரிமைகளினை வென்றெடுப்பதற்கு அரசியல் ரீதியாக ஈழத்தமிழர்களாகிய நாம் எம்மை பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. இன்று எமது பிரதிநிதித்துவ பலத்தை சிதறடிக்கின்ற வகையில் தமிழ்தேசிய பரப்பில் மூன்று தரப்புகளாக பிளவுபட்டு நிற்கின்றோம். உண்மையாக தேசியத்தை நேசிப்பவர்களாக இருந்தால் மூன்று தரப்புகளாய் பிளவுபட்டு நிற்கும் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட முடியும். இங்கு தமிழ் தேசியத்தின் நலனை விட கட்சிகளின் நலன்களே முதன்மை பெறுவதனாலேயே இத்தகைய பிளவுகள் ஏற்படுகின்றன. இன்றைய சூழலில் தேசியத்தை நேசிக்கும் தரப்புகள் ஒற்றுமைப்பட வேண்டியது மிக மிக அவசியமானதாகும்.

போர்க்குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்த வலியுறுத்தியும், அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் உரிய தீர்வினை பெற்றுத்தர வலியுறுத்தியும், திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக போரட்டங்களினை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அத்தகைய போரட்டங்களினை கண்டு கொள்ளாது தென்னிலங்கை அரசியல்வாதிகள் தாம் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றுவதிலேயே அதிக கரிசணை செலுத்துவதோடு அதற்காக போர்க்குற்றங்களோடு தொடர்புடையவர்களினை முன்னிலைப்படுத்தும் போக்கும் காணப்படுகின்றது. இதனை தட்டிக்கேட்கும் திராணி தமிழ்த்தேசிய பரப்பில் உள்ளவர்களிடம் இல்லாதுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும். எனவே இன்றைய தேர்தல் கால சூழலினை கையாளுவதற்கு எழுக தமிழ் மக்கள் எழுச்சி ஓர் காத்திரமான செய்தியினை தென்னிலங்கைக்கு வழங்க இவ் மக்கள் எழுச்சியினை பலப்படுத்த வேண்டும்.

தமிழ்த்தேசியத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் எவருமே இத்தகைய மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு ஆதரவு வழங்காமல் பின்னடிக்க முடியாது என்பதனாலேயே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் எமது பூரண ஆதரவினை வழங்க முன்வந்துள்ளோம். அதுபோல தமிழ் தேசியத்தினை நேசிக்கும் தரப்புகள் பாகுபாடுகளினை மறந்து தமிழ்த்தேசியத்தினை வலுப்படுத்த அணி திரள வேண்டும்.

எழுக தமிழ் பேரணியில் வலியுறுத்தப்படும் பிரதான கோரிக்கைகளான,

1. சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து
2. சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடாத்து
3. தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய் 4.வலிந்துகாணமலாக்கப்பட்டோர் தொடர்பில் உடனடியாக விசாரணை
நடாத்து
5. வடக்கு – கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து
6. இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களில் மீள
குடியமர்த்து

என்பவை தமிழ்த்தரப்பு மீதான ஒடுக்கு முறைக்கு நிகழ்கால சான்றுகளாகும். இத்தகு கேரிக்கைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளும் எழுக தமிழ் மக்கள் எழுச்சி பேரணியானது, தமிழ் மக்கள் தமது நிலைப்பாடுகளில் தெளிவாக உள்ளார்கள் என்ற செய்தியினை இலங்கை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்தும் வகையிலான பேரெழுச்சியாக இடம்பெற தமிழ் தேசியத்தை நேசிக்கும் மேற்குறித்த கோரிக்கைகள் தமிழர் தேசத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரானவை எனும் கருத்தில் உடன்படும் அனைத்து தரப்பினரையும் புரட்டாதி 16 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகும் எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு மக்கள் எழுச்சியினை வலுப்படுத்துவதனூடாக எழுக தமிழ் மக்கள் எழுச்சி பேரணியின் கோரிக்கைகளை வலுவாக ஓங்கி ஒலிக்க வலுச்சேர்க்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்