எலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்

எலும்பே நலம்தானா?!

சில உணவுகள் ஆரோக்கியமானவை என்று தெரிந்தாலுமே சுவை பிடிக்காமல் தவிர்ப்போம். அப்படித் தவிர்க்கும் உணவுகளில் மருத்துவ குணங்கள் அபரிமிதமாக இருப்பதை உணர்ந்திருக்க மாட்டோம். எலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் சில உணவுகளைப் பார்ப்போமா?!

ஓட்ஸ்

இன்றைய எந்திர உலகில் பலருக்கும் ஆபத்பாந்தவனாக இருப்பது ஓட்ஸ். தயாரிப்பதும் சுலபம். இதில் வைட்டமின் பி6 மற்றும் பி12 சத்துகள் நிறைய உள்ளன. மூட்டுகளின் வீக்கத்துக்குக் காரணமான, ரத்தத்திலுள்ள ஹோமோசிஸ்டைன் என்கிற அமினோ அமிலத்தின் அளவைக் குறைக்க வல்லவை. நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால் குடலில் சேரும் நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன. ஓட்ஸைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. ரீஃபைண்டு ஓட்ஸில் மேற்சொன்ன எந்தச் சத்துகளும் இருக்காது என்பதால் அவற்றைத் தவிர்ப்பது சிறந்தது.

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி பிரதானமாக இருக்கும். உடலின் நோய் எதிர்ப்பு
சக்திக்கும், இரும்புச் சத்து கிரகிக்கப்படுவதற்கும் வைட்டமின் சி அவசியம். தவிர இவை ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் பிரச்னையையும் தவிர்க்கக் கூடியவை. வீக்கத்தைக் குறைக்கக் கூடியவை.

உணவுகளில் அக்கறை செலுத்தும் அதே நேரம், உடற்பயிற்சியிலும் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். எலும்புகளின் ஆரோக்கியத்தில் உணவுகளுக்கு இணையாக உடற்பயிற்சிகளின் பங்கும் உள்ளது. நடைப்பயிற்சி, ஸ்கிப்பிங், சைக்கிள் ஓட்டுதல், மெது ஓட்டம் என ஏதேனும் ஒரு பயிற்சியை மிதமான வேகத்தில் தினமும் சிறிது நேரம் செய்வது நல்லது.

புரோக்கோலி

க்ரூசிஃபெரஸ் காய்கறி வகையைச் சேர்ந்தது இது. க்ரூசிஃபெரஸ் காய்களில் சல்போராபேன் என்கிற கலவை இருக்கும். இவை மூட்டுகளின் குறுத்தெலும்புகளின் ஆரோக்கியம் காப்பவை. மூட்டுப் பிரச்னைகளுக்குக் காரணமான நொதிகளைத் தடுத்து, அதன் விளைவாக வீக்கத்தையும், வலியையும் குறைக்கும் குணம் கொண்டவை. தவிர புரோக்கோலியில் வைட்டமின் ஏ முதல் கே வரை அனைத்தும் உள்ளன. மக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற சத்துகளும் உள்ளன. அதிகளவிலான கால்சியமும் உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருபவை.

பால் பொருட்கள்

குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அவசியமானவை. பால், தயிர், பன்னீர், சீஸ் போன்றவற்றில் எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துகள் உள்ளன. கால்சியம் உடலால் கிரகிக்கப்படுவதற்கு வைட்டமின் டி மிகவும் அவசியம். தவிர அது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பால் உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்தும் என்பவர்கள், அவற்றுக்கு மாற்றாக சோயா பால், சோயா பனீர் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.

வால்நட்ஸ்

தினமும் 2 முதல் 3 வால்நட்டுகளை உண்பவர்களுக்கு மூட்டுவலி வரும் அபாயம் தள்ளிப்போகும். காரணம் அதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம். ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ் பிரச்னையால் பாதிக்கப்படும் பலருக்கும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அடங்கிய சப்ளிமென்ட்டுகள் பரிந்துரைக்கப்படுவதன் பின்னணியும் இதுதான். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு வால்நட் கொடுத்துப் பழக்குவது, வளரும்போது அவர்களுடைய எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


Recommended For You

About the Author: Webadmin