எழுக தமிழுக்கு முன்னணி நிபந்தனை

“எழுக தமிழ்” எழுச்சிப் பேரணியில் பங்கேற்பது தொடர்பான பேச்சுக்கு வருவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் விதிக்கப்பட்ட நிபந்தனையை ஏற்பதில் தமிழ் மக்கள் பேரவைக்குள் குழப்பம் நீடிப்பதாக அறிய முடிகிறது.

தமிழ் மக்கள் பேரவையுடன் நடத்தப்படும் பேச்சுக்கள் தொடர்பில் அதன் பிரதிநிதிகளால் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியிடப்படுவதைத் தடுக்கும் வகையில் சந்திப்பு முழுவதும் ஒளி, ஒலிப் பதிவை மேற்கொள்ளப்படவேண்டும், தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாட்டில் உள்ளதால் அவது ஸ்கைப் மூலம் பேச்சுக்களில் பங்கேற்க அனுமதியளிக்கப்படவேண்டும் ஆகிய இரண்டு நிபந்தனைகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி விதித்துள்ளது.

“எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி வரும் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

இதற்காக தமிழ் மக்கள் பேரவையினர் தொடர் பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முதலாவது “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணியில் வீதியில் இறங்கிப் பணியாற்றியிருந்தனர்.

எனினும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் ஒருவரான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், தனியாக கட்சி ஆரம்பித்ததை அடுத்து ஏற்பட்ட முரண்நிலைகளால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இம்முறை நடைபெறும் பேரணிக்கான ஏற்பாடுகளில் பங்கேற்காமல் விலகியுள்ளனர்.

இந்த நிலையில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் இணைத்துச் செல்வதற்கு தமிழ் மக்கள் பேரவை பேச்சுக்கு அழைத்தது. அந்தப் பேச்சில் பங்கேற்பதற்கே 2 நிபந்தனைகளைக் குறிப்பிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த வாரம் எழுத்துமூல பதில் வழங்கியிருந்தது.

நிபந்தனைகளை ஏற்று பேச்சுக்களில் பங்கேற்பது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையிடமிருந்து உரிய பதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வழங்கப்படவில்லை என்று தெரியவருகிறது.


Recommended For You

About the Author: ஈழவன்