சிமாட் லாட் போல்களுக்கான ஆவணமாக எவ்வாறு கருத முடியும்?

ஊடாக அறிக்கை

யாழ்.மாநகர சபை யின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் சிமாட் லாம் போல் எனப்படும் மொனோப்போல் தொலைத் தொடர்பு கோபுரங்களை நிறுவது தொடர்பான சர்ச்சைகள் எழுந்த போது அது தொடர்பில்; 18.7.2019 அன்று நடைபெற்ற யாழ்.மாநகர சபையின் பொதுகூட்டத்தில் ஆராயப்பட்டது. அதில் சிமாட் லாம் போலின் கட்டமைப்பு எவ்வாறு காணப்படும் ஒரு தொலைத்தொடர்பு கோபுரத்தின் கட்டமைப்பு எவ்வாறு காணப்படும் என்று பல ஆவணங்களுடன் எம்மால் கருத்து முன்வைக்கப்பட்டது. அதில் கருத்து தெரிவித்த கௌரவ முதல்வர் அவர்கள் இவ் விடயம் தொடர்பில் ஏற்பட்ட குழப்பங்களால் வேலை இடைநிறுத்தப்பட்டுள்ளது. உரிய நிறுவனத்தை வரவைத்து முறைப்படி கலந்துரையாடி தெளிவான விளக்கத்தை தங்களுக்கு வழங்கி தொழில்நுட்ப அறிக்கை பெற்றுத் தரப்படும் என்றார்.

ஆனால் உரிய நிறுவனத்தை வரவைத்து முறைப்படி கலந்துரையாடி தெளிவான விளக்கத்தை வழங்காமல்  தொழில்நுட்ப அறிக்கையை பெற்றுத் தராமல் தற்போது  மீண்டும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் 18.07.2019 அன்று நடபெற்ற பொதுக்கூட்டத்தில் தாங்கள் ரி.ஆர்.சி எனப்படும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்றே இக் கோபுரங்களை நிறுவுகின்றோம் என்பதனை தெரிவித்ததுடன் அது தொடர்பான ஏதோ ஆவணங்களை சபையில் தூக்கி காட்டினார்கள். ஆனால் நாம் தொலைத் தொடர்பு ஆணைக்குழுவிடம் தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்ட போது அவர்கள் அவ்வாறான எந்த ஒரு அனுமதியையும் வழங்கவில்லை என்று எமக்கு தெரிவித்திருந்தனர். ஆக 18.07.2019 அன்றைய சபை அமர்வுக்கு முன்னர் ஒரு மாநகர சபை உறுப்பினர் அருகில் இருந்து கொடுக்க கொடுக்க யாழ்.மாநகர முதல்வரால் தொடர்பாக ஊட்கங்களுக்கு தெளிவு படுத்தலின் போது காண்பிக்கப்பட்ட ஆவணங்கள் (ரி.ஆர்.சி அனுமதி யூ.டி.ஏ அனுமதி, ஆர்.டி.ஏ அனுமதி) என்ன  என்பது தொடர்பில் அறிந்து கொள்ளும் முகமாக சக மாநகர சபை உறுப்பினர் சிவகாந்தன் தனுஜன் தகவல் அறியும் சட்டத்தன் மூலம் யாழ்.மாநகர சபையிடம் கேட்டிருந்தார். அப்போது அவர்கள் தந்த ஆவணம் எமக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. அது பற்றி இதன் இறுதியில் பதிவிடுகின்றேன். இது தொடர்பில் 8.8.2019 அன்று நடைபெற்ற சபை அமர்வில் விவாதிக்க முற்படுகையில் கௌரவ முதல்வர் அவர்கள் குறித்த விடயம் தற்போது நீதிமன்ற விடயமாக உள்ளதனால் இது பற்றி சபையில் விவாதிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

சிமாட் லாம் போல்  விடயம் கௌரவ நீதிமன்றில் உள்ளதனால் சிமாட் லாம் போல்   பற்றி கௌரவ சபையில் விவாதிக்க முடியாது கூறப்படுகின்ற அதே சமயம் சிமாட் லாம் போல்களில் குறித்த நிறுவனம் எவ்வாறு மேம்படுத்தல் வேலைகளைச் செய்ய முடியும்?

குறித்த நிறுவனம் தற்போது அவசரம் அவசரமாக மேற்கொள்ளப்படும் மேம்படுத்தல் வேலைகளின் பின்னனி பற்றியும் கவனம் செலுத்த வேண்டும்.

18.7.2019 அன்று நடைபெற்ற சபை அமர்வின் போது ஒரு சிமாட் லாம் போல் எவ்வாறு இருக்கும் என்று அதன் கட்டமைப்பு தெளிவுபடுத்தப்பட்டது. அதற்கு சான்றாக முதலில் யாழ்.நகரத்தினுள் நவீன சந்தைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள சிமாட் லாம்போல் சுட்டிக் காட்டப்பட்டது. அதன் பின்னர் அமைக்கப்பட்ட அனைத்து சிமாட்லாம் போல்கள் அல்ல அது தொலைத் தொடர்பு கோபுரங்கள் என தெரிவித்திருந்தோம்.

அதற்போது யாழ்.நகரப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமாட்லாம் போலின் கட்டமைப்புக்கு ஏற்றாப்போல் ஏனைய தொலைத் தொடர்பு கோபுரங்களின் கட்டமைப்புக்கள் அவசரம் அவசரமாக மாற்றப்படுகின்றன.

ஏற்கனவே அமைக்கப்பட்ட கோபுரங்களில் கீழிருந்து அதன் அரைவாசி தூரத்தில் ஒரு மின் குமிழ் மட்டுமே பொருத்தப்பட்டது. அத்துடன் கோபுரத்தின் மேல் நுனியில் 3 தொலைத்தொடர்பு கோபுர அலைவரிசை  பூஸ்ரர்கள் பூட்டப்பட்டன. ஆனால் தற்போது இடையில் பூட்டப்பட்டுள்ள மின் விளக்கு கழட்டப்பட்டு கோபுரத்தின் மேல் நுனியில் மூன்று தொலைத் தொடர்பு அலைக்கற்றை பூஸ்ரர்கள் பூட்டப்பட்ட இடத்தில் 3 மின்விளக்குகள் பூட்டப்படுகின்றன. (படம் 1)

ஏன் இந்த அவசரமான மாற்றம்? தொலைத் தொடர்புக் கோபுரம் என்ற கட்டமைப்பைக் கொண்டவை தற்போது ஏன் அவசர அவரசமாக சிமாட் லாம் போல் கட்டமைப்புக்கு ஏற்றாற் போல் மாற்றப்படுகின்றன?

எதிர்வரும் 12.09.2019 அன்று யாழ்.உயர்நீதிமன்றில் சிமாட்லாம் போல் தொடர்பான வழக்கு எடுக்கப்படும் போது இவை வெறும் சிமாட்லாம் போல்கள் தான் இவை மின்விளக்குகளைப் பொருத்துவதற்கு தான் பயன்படுத்தப்படுகின்றது இதில் எந்த அலைவரிசையும் வரப்போவதில்லை என்ற வாதத்தை முன்வைப்பதற்காவும் இவ் அவசர மாற்றங்கள் காரண்களாக இருக்கலாம்.

நல்லூர் செட்டித்தெரு வீதியில் ஏற்கனவே வீதி மின் விளக்கிற்குரிய மின்கம்பம் ஒன்று உள்ளது. அதில் 150 வட்ஸ் கொண்ட உயர்ந்த ஒளிச்செறிவுள்ள எல்.ஈ.டி மின்குமிழ் ஒன்று யாழ்.மாநகர சபையால் பொருத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் அந்த வீதி மின் கம்பத்திற்கு மிக அருகாமையில் சிமாட் லாம் போல் என்று தொலைத் தொடர்பு கோபுரம் பொருத்தப்பட்டது. நேற்று அது சிமாட் லாம் போலின் கட்டமைப்பாக மாற்றப்பட்டது. இப்போது கூறப்படுகின்றது அது மின் விளக்குகளை பொருத்துவதற்கு மட்டும் அமைக்கப்பட்ட மின் கம்பம் என்று. ஆக ஏற்கனவே உள்ள ஒரு மின்கம்பத்துக்கு பக்கத்தில் ஏறத்தாள 30 இலட்சம்; ரூபா பெறுமதியான ஒரு கம்பத்தினை  அமைந்து ஒரு மின்குமிழை  கம்பத்தின் இடையில் பொருத்திய நிலையில், இன்று அவ் மின் குமிழைக் கழட்டி விட்டு அக் கம்பத்தின் உச்சியில் 3 மின்குமிழ்களை பொருத்த வேண்டிய தேவைப்பாடு என்ன?

சிமாட் லாம் போல்கள் தெருவுக்கு வெளிச்சம் தருவற்கு பொருத்தப்படுகின்றனவா அல்லது தெருவோடு இருக்கின்ற வீடுகளுக்கு வெளிச்சத்தை கொடுப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றனவா? என்ற கேள்வியும் ஏழாமல் இல்லை. ஏன் எனில் செட்டித் தெருவில் பூட்டப்பட்டிருக்கின்ற 3 மின் குமிழ்களில் 2 மின் குமிழ்கள் அருகில் உள்ள வீட்டுக்கே வெளிச்சத்தினைக் கொடுகின்றன. அதிலும் அவ் வீட்டிற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள மலசல கூடத்திற்கு வெளிச்சத்தை குறத்த கம்பம் வழங்குகின்றது. (படம் 2)

ஆக வேறு ஒரு தேவைக்காக (அலைக்கற்றைகளுக்குரிய பூஸ்ரர்களை பொருத்துவதற்கு) அமைக்கப்பட்ட கம்பங்கள் இன்று அவசர அவசரமாக அதன் கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட்டதன் விளைவே இது. 30 இலட்சம் ரூபா பொறுமதியில் அமைக்கப்பட்ட சிமாட் கம்பங்கள் மூலம் வீடுகளுக்கு மட்டுமல்ல வெளியிலே அமைக்கப்பட்டுள்ள மலசல கூடங்களுக்கும் வெளிச்சம் வழங்கும் அளவுக்கு நாம்  முன்னேறியுள்ளோமா? இவை மின்விளக்குகளை பொருத்துவதற்கு அமைக்கப்பட்ட கம்பங்களா? என்பதற்கான விடைகளை உங்கள் சிந்தனைகே விட்டு விடுகின்றேன். அத்துடன் யாழ்.மாநகர சபையினால் பொருத்தப்பட்ட ஒரு சில வீதி மின்விளக்குகளின் வெளிச்சம் தங்களுடைய வீடுகளுக்குள் விழுவதனால் தங்களுக்கு அது சௌகாயமாக உள்ளது என்று முறையிட்டதன் காரணமாக அவை கழட்டப்பட்ட சம்பங்களும் உள்ளன.

என்னைப் பொறுத்தவரை இவை மின்விளக்குகளை பொருத்துவதற்காக மட்டும் அமைக்கப்பட்ட கம்பங்கள் அல்ல. குறித்த விடயம் நீதிமன்றம் வரை சென்றுள்ளதனால் அவற்றினை மின் விளக்குப் பொருத்துவதற்கு அமைக்கப்பட்ட கம்பங்களாக காட்டிக் கொள்வதற்கும் அதில் எந்த அலைவரிசைக்குரிய சாதனங்களும் வரப்போவதில்லை என்பதனை காட்டுவற்காகவும், அதன் கட்டமைப்பில் மாற்றங்களை உருவாக்க வேண்டிய தேவை எழுந்தன் காரணமாகவே இவ் அவசர அவசரமான மாற்றங்கள் குறித்த கம்பங்களில் நிகழுகின்றன என்பது வெளிப்படை
அடுத்த விடயம்

18.07.2019 அன்றைய சபை அமர்வுக்கு முன்னர் ஒரு மாநகர சபை உறுப்பினர் அருகில் இருந்து கொடுக்க கொடுக்க யாழ்.மாநகர முதல்வரால் தொடர்பாக ஊட்கங்களுக்கு தெளிவு படுத்தலின் போது காண்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக சக உறுப்பினர் சிவகாந்தன் தனுஜன் யாழ்.மாநகர சபையிடம் தகவல் அறியும் சட்டம் மூலம் (யூ.டி.யு அனுமதி , ரி.ஆர்.சி அனுமதி, ஆர்.டி.யு அனுமதி) கேட்டிருந்தார் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டு இருந்தேன். யாழ்.மாநகர சபையும் அதற்கான பதிலை வழங்கியது அதில் ரி.ஆர்.சி தொடர்பான ஆவணம் ஒன்றினை வழங்கியதுடன் ஏனைய ஆவணங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறியும் சட்டம் மூலம் சக உறுப்பினர் தனுஜனுக்கு வழங்கப்பட்ட ரி.ஆர்.சி ஆவணம் எதுவெனில் 15.02.2018 அன்று வழங்கப்பட்ட கொள்ளுப்பிட்டி இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள  ஒரு லாம் போஸ்ட் அனுமதி தொடர்பானது.

அதில் குறித்த லாம்போஸ்ட்க்கான  Site Location Address, GPS point  ஆகிய காணப்படுகின்றன. ஆக கொள்ளுப்பிடியில் உள்ள ஒரு லாம் போஸ்ட்க்கான ஆவணம் எவ்வாறு யாழ்.மாநகர சபைக்குள் நிறுவப்படும் லாம் போஸ்ட்களுக்கான ஆவணமாக கருதலாம். அத்துடன் 15.02.2018 திகதியிடப்பட்டு கொழும்பு மாநகர முதல்வருக்கும் பிரதியாக அனுப்பட்ட குறித்த ஆவணம் 26.03.2018 ஆம் ஆண்டு தனது கன்னியமர்வை ஆரம்பித்த யாழ்.மாநகரசபையில் சிமாட் லாட் போல்களுக்கான ஆவணமாக எவ்வாறு கருத முடியும்? இவ் வினாக்களுக்கான விடைகள் உங்கள் சிந்தனைக்கும் தேடலுக்கும் உரியவை.

வரதராஜன் பார்த்திபன்
யாழ்.மாநகர சபை உறுப்பினர்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

 


Recommended For You

About the Author: Editor