முரளிதரனால் நெருக்கடியில் கோத்தபாய!

இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் நேற்று ஆற்றிய உரையின் காரணமாக, கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கோத்தபாய தலைமையில் வியத்மக அமைப்பின் இளைஞர் மாநாடு நேற்று கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய முரளிதரன், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கக் கூடிய அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரே நாட்டை ஆள வேண்டும் என்றும், வர்த்தகரோ விளையாட்டு வீரரோ ஏனைய துறைசார் வல்லுனர்களாலோ அதனை சாதிக்க முடியாது என்று கூறியிருந்தார். இது கோத்தாபய ராஜபக்சவின் அரசியல் நிலைப்பாட்டுக்கும், எதிர்பார்ப்புக்கும் எதிரான கருத்தாக பார்க்கப்படுகிறது.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் அரசியல்வாதி அல்லாத துறைசார் வல்லுனர்களையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கோத்தாபய ராஜபக்ச தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

பொது மேடையில் முத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ள கருத்தானது, கோத்தபாயவின் அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்தாக பார்க்கப்படுகிறது. அனுபமிக்க அரசியல்வாதி ஒருவரை ஜனாதிபதியாக வரவேண்டும் என முரளிதரன் வலியுறுத்தியுள்ளார். எனினும் சிறந்த ஆளுமையுள்ள வல்லுநர் ஒருவரே ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற நிலைப்பாட்டினை கோத்தபாய கொண்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் ஒரே மேடையில் இருவேறு விதமான நிலைப்பாட்டை கொண்டவர்களின் கருத்துப் பரிமாற்றமானது, கோத்தபாயவின் அரசியல் பயணத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் அச்சம் ராஜபக்ஷர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor