விவசாயிகளுக்கு உதவும் பொறி!!

`விவசாய உற்பத்தியில் கிட்டத்தட்ட 35% அளவை பூச்சிகள் அழித்துவிடுகின்றன என்கிறது இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் (ICAR).

பூச்சிகளை அழித்தொழிக்க பெரும்பாலும் நம் விவசாயிகள் இரசாயனம் சார்ந்த பூச்சிக்கொல்லிகளையே பயன்படுத்துகின்றனர். ஒருங்கிணைந்த தீங்குயிர் மேலாண்மையில் பலதரப்பட்ட வழிகளில் பூச்சிகளைத் தடுக்கும் வழிகள் சொல்லப்பட்டுள்ளன, இதில் இறுதிக்கட்டமாக பரிந்துரைக்கப்படும் முறையே இரசாயன முறை. இரசாயனத்தால் பூச்சிகள் குறைந்தாலும் மண்ணுக்கும் ஆரோக்கியத்துக்கும் கேடு மட்டுமே மிச்சம். தீமை செய்யும் இரசாயனத்துக்கு மாற்றாகவும், இயற்கை விவசாயத்துக்கு உதவும் வகையிலும் புதிய கருவி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார் புதுச்சேரியைச் சேர்ந்த அப்துல் காதர்.

பூச்சிகளைக் கவரும் தானியங்கிக் கருவி

மின் & மின்னணு பொறியாளரான அப்துல் காதருக்கு விவசாயத்தின் மேல் ஆர்வம். தன் வேலையை விடுத்து சொந்த ஊரான புதுச்சேரியில் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். அப்போது விவசாய அறிஞர்கள் மூலம் பூச்சிகளினால் ஏற்படும் தீமை குறித்து அறிந்துகொண்டார். பூச்சிகள் செயற்கை ஒளியை நோக்கி வரும் என்கிற யோசனையைக் கொண்டு, இரண்டு வருட ஆராய்ச்சி மூலம் 2012ஆம் ஆண்டு தன்னுடைய, பூச்சி ஈர்ப்புக் கருவியைக் கண்டுபிடித்தார். இதற்கு 2014ஆம் ஆண்டு இந்திய அரசின் காப்புரிமை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“பூச்சிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணமுண்டு. பல வேளாண் மற்றும் பூச்சிகள் குறித்த ஆராய்ச்சிகள் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் பெரும்பாலும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வெளிவருவதாகக் கூறுகின்றன. பூச்சிகள் நாம் பார்க்கும் ஒளியைத் தவிர, புற ஊதாக் கதிர்களையும் உணரும் தன்மைகொண்டவை. இதனாலேயே செயற்கை ஒளியைப் பார்த்ததும் அங்கு சென்று வட்டமடிக்கின்றன. இந்தக் கோட்பாட்டைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கவரும் அலைவரிசை கொண்ட ஒளியை உமிழும் கருவியைத் தயாரித்தோம். இதன்மூலம் பயிர்களை அழிக்கும் தட்டான் பூச்சி, காண்டாமிருக வண்டு, கதிர் நாவாய்ப் பூச்சி, காய்த்துளைப்பான், சாறு உறிஞ்சும் பூச்சி உள்ளிட்ட பல தீய பூச்சிகள் கருவியின் LED விளக்கு நோக்கி ஈர்க்கப்படுகின்றன. LED லைட்டுக்குக் கீழே இருக்கும் பாத்திரத்தில், தண்ணீர் மற்றும் விளக்கெண்ணெய் அல்லது பிற எண்ணெயைக் கலந்துவைத்தால், அந்தக் கலவையில் பூச்சிகள் விழுந்து இறக்கின்றன” என்கிறார் அப்துல் காதர்.

சூரிய சக்தி, மின்சக்தி மற்றும் பேட்டரியில் இயங்கக்கூடிய தனித்தனி வகைகளில் இந்த விளக்கு பூச்சிப் பொறி கிடைக்கிறது. இந்தக் கருவி தானியங்கி என்பதால் மாலை 6 மணிக்கு இயங்க ஆரம்பித்து, 10 மணிக்கு தானே அணைந்துவிடக்கூடியது. பின்னிரவில் நல்ல பூச்சிகள் வரக்கூடும் என்பதால் இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பூச்சிகள் வரக்கூடிய சமயத்தில் விளக்குப் பொறி பயன்படுத்துவதால் பூச்சிகள் கிட்டத்தட்ட 60 – 75% குறைகின்றன, கூட்டுப்புழுக்கள் மற்றும் முட்டைப்புழுக்கள் உருவாவதும் தடுக்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor