தொழில் முனைவோர் கண்காட்சி சிங்களவர்களுக்கே

யாழ்ப்பாணம்  முற்றவெளியில்  கடந்த 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நிதி அமைச்சினால் “தொழில் முனைவுக்கண்காட்சி” (Enterprise Sri Lanka Exhibition 2019 – Jaffna ) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிம்பிளாக சொன்னால் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணம் அரசியல் தேவைக்காக அநியாயமாக முற்றவெளியில் கொட்டப்பட்டிருக்கிறது.
திறப்பு விழாவுக்கு ரணிலும் சக அமைச்சர்களும்  வந்தமையால் அன்றைய தினம் காலை முதலே முற்றவெளி அல்லோலகல்லப்பட்டது. முற்றவெளி சுற்றுப்புறம் எங்கும் அதிரடிப்படையினர், இராணுவம், பொலிஸ், புலனாய்வாளர்களால் நிறைந்து இருந்தது. பிரமுகர்களின் வாகனத்தொடரணிகள் வந்து போகும் தருணங்களில் மட்டும் பிரதான வீதிகளின் ஒரு பக்கம் போக்குவரத்து தடைப்பட்டது.
கண்காட்சிக்கு வருகை தந்தோரது வாகனங்களை வீதியோரங்களிலும் வாகனங்களை நிறுத்த பொலிஸார் அனுமதிக்கவில்லை.  பலர் பிரதான தபால் நிலையத்தின் உள்ளும், தனியார் பஸ் தரிப்பிடத்துக்கு வெளியிலும் மோட்டார் சைக்கிள்கள், இதர வாகனங்களை கடும் வெயிலுக்கு மத்தியில் நிறுத்தி இருந்தனர்.  ஆனால் நுழைவாயிலோ அடுத்த பக்கத்தில் தான்.
கோடிக்கணக்கில் செலவழித்து கண்காட்சியை ஏற்பாடு செய்தவர்களால் முறையான வாகனத் தரிப்பிட வசதியை ஏற்படுத்த முடியாது போய் விட்டது.
யாழ் பொதுநூலக வளாகத்துக்குள் காலை முதலே கண்காட்சிக்கு வந்த ஏராளமானோரது வாகனங்கள் தரித்து விடப்பட்டதால் நூலகத்திலும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாயில் பாதுகாவலர்களை  பிரதம நூலகர் கடிந்து கொண்டார். வாகனங்கள்  எவற்றையும் வளாகத்துக்குள் அனுமதிக்க  வேண்டாமென  பொதுநூலகர்  கண்டிப்பான  உத்தரவு வழங்கினார்.
இதனால் வழமையாக திறந்திருக்கும் பின் பகுதி நுழைவாயில் மூடப்பட்டு நூலகத்துக்கு வருவோர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் பொதுநூலக நிர்வாகத்தினருடன் பேசி பொதுநூலக வளாகத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதியை  பெற்றிருக்கலாம்.
விழாவுக்கு வந்த நிறைய  பேர்  கண்காட்சி நுழைவாயில்   எங்கே என்று தெரியாமல்  அலைந்து திரிந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
  யாழ் பொது நூலகத்தின் பின்வாயிலுக்கு எதிர்புறத்தில் தான் கண்காட்சியின் பிரதான நுழைவாயில் அமைந்திருந்தது. காலையில் நேரகாலத்துக்கே விற்பனைப் பொருள்களை கொண்டுவந்த முயற்சியாளர்களின் வாகனங்களைக் கூட  தோண்டித்துருவி செக் பண்ணி சில மணிநேரங்களின் பின்பே உள்ளே அனுமதித்தார்கள்.
மதியம் அங்கிருந்த முயற்சியாளர்கள் சாப்பாட்டுக்கு அலைந்து திரிந்தனர். சிங்களவர்களால் நடாத்தப்படும் noodles , hot dog போன்ற உணவுகள் தான் கண்காட்சி நடைபாதையில் இருந்தன. அவர்களுக்கு தான் வியாபாரம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது.
மதியப் பசிக்கு எதையாவது சாப்பிட்டால் போதும் என்ற நோக்கில் அந்தக் கடைகளில் பலரும் வாங்கி சாப்பிட்டனர். சிலர் மட்டும் வெளியில் சென்று யாழ்நகர கடைகளில் சாப்பிட்டனர்.
அம்மாச்சியை தேடி அலையும் நிலை ஏற்பட்டது. பிரதான நடைபாதையில் சிங்களவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை எங்கள் ஏற்பாடு செய்த தமிழ் அதிகாரிகள் கவனித்திருக்கலாம். அம்மாச்சிக்கு ஒதுக்கு புறத்தில் இடம் ஒதுக்கி  இருக்கிறார்கள். அங்கு மதியம் குழைசோறு கூட இல்லை. அப்பம் சுட்டு வைத்திருந்தார்கள். மதிய சாப்பாடுகள் சார்ந்து தமிழர்களின் கடைகள்   எங்கும் இல்லை.
கண்காட்சி அரங்கின் இறுதியில் தனியார் பஸ் நிலையத்தை அண்டியுள்ள சிங்கள கடையில் மூடிய கண்ணாடி  அறைக்குள் இல்லாமல் வெளியே வைத்து வெறுங்கைகளால் கோழியிறைச்சி வெட்டிக் கொண்டிருந்தார்கள். அப்படித்தான் மரக்கறிகளையும் வெட்டினார்கள். குறைந்தப்பட்ச சுகாதாரம் கூட அங்கே பேணப்படவில்லை.
எங்கள் PHI  மார் அந்நேரம் எங்கேனும் ஒரு கிராமத்தில் முறுக்கு சுடும் பாட்டிக்கும் மரவள்ளிக்கிழங்கு பொரிக்கும் அம்மாக்களுக்கும்  சுத்தி கண்ணாடி அடிக்கவிட்டால் வழக்கு போடுவேன். மேலே சீற் அடிக்க வேண்டும். கீழ மாபிள் பதிக்க வேண்டும். என அறிவுறுத்தி அதற்கு குறிப்பிட்ட கால அவகாசமும் வழங்காமல் உற்பத்தியை உடன் நிறுத்துவேன் என மிரட்டிக் கொண்டிருப்பார்கள். அல்லது உடனே அவர்களின் உற்பத்தியை நிறுத்தியும் விடுவார்கள். இவர்கள் உள்ளூர் உற்பத்திகளை இப்படி முடக்கியதனால் தான் கண்காட்சியில் மதியச் சாப்பாடு தயாரித்து கொடுக்க கூட யாழ்ப்பாணத்தில் ஒரு முயற்சியாளர் இல்லாமல் போய்விட்டாரோ என எண்ணத் தோன்றுகின்றது.
கண்காட்சியை ஏற்பாடு செய்த எங்கள் அரச அதிகாரிகளின் அரச அடி வருடும் மனநிலை தெளிவாகவே வெளிப்பட்டது.
“தொழில் முனைவுக்கண்காட்சி”  என அழகாக தமிழிலேயே போட்டிருக்கலாம். Enterprise SriLanka என்பதனை அப்படியே தமிங்கிலீஷ் இல் போட்டிருந்தார்கள்.  அதாவது ‘என்டர்பிரைஸ் சிறீலங்கா’ என சகல பனர்களிலும் கொட்டை எழுத்துக்களில் அச்சடிக்கப்பட்டிருந்தன.
அரசதுறைகளின் செயற்பாடுகளை மக்கள் அறிந்து கொள்ளக் கூடியதான அரங்குகளும், விவசாயம், கல்வி, வர்த்தகம் தொடர்பான அரங்குகளும் இருந்தன. இதனையும் தாண்டி சிறுவர்களுக்கான விளையாட்டு சிறப்பிடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது பிரயோசனமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.
காலை 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நடைபெறுமாம். கண்காட்சியின் நடுவே பிரமாண்ட மேடைகள் அமைக்கப்பட்டு சிங்கள பாடல்களும், சிங்களவர்களின் அரைகுறை நடனங்களும் அரங்கேறுகின்றன.
இக்கண்காட்சி இரண்டு பிரதான நோக்கங்களுக்காக தான் நடாத்தப்படுகின்றது. ஒன்று சிங்களவர்களின் பொருளாதாரத்தை வடக்குக்கு விஸ்தரித்து இங்கே நிலைபெறச் செய்வது, இரண்டாவது ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் ஆதரவுடன் தமிழ்மக்களின் ஆதரவை திரட்ட ரணில் மேற்கொண்ட ஒரு முயற்சியாகவும் இது பார்க்கப்படுகின்றது.
புதிய தலைமுறையினரின் தொழில்முயற்சி எதிர்பார்ப்புக்களை மேம்படுத்துவதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாம்.  புதிய தொழில் முயற்சியாளர்கள் இந்தக் கண்காட்சியில் அரங்கை பதிவதற்கு ஓடோடி அல்லல்பட்டு திரிந்ததை கேட்டால் அவர்களே சொல்வார்கள் . 10 X 10 அடி அரங்குக்கு  25000 ரூபாய் அறவிடப்பட்டது. சிலருக்கு பல்வேறு கட்ட அலைக்கழிப்புக்களுக்கு பிறகு  இலவசமாகவும் வழங்கப்பட்டது.
இளம் தொழில் முனைவோருக்கான கடன் திட்டமும் Enterprise SriLanka எனும் பெயரில் தென்பகுதிக்கே அதிகளவில் வழங்கப்பட்டன. இங்கே மிகச்சிலரே பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு  குறித்த கடன்களை பெற்றிருந்தனர்.
தொழில் முனைவோருக்கு கண்காட்சியின் இறுதியில் இரு அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  மொத்தத்தில் ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது. கடந்த கால போரில் சின்னாபின்னமாகி இருந்த எம் மக்களின் தொழில்துறைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதையே அவதானிக்க கூடியதாக இருந்தது.  கிட்டத்தட்ட சிறு முதலோடு தொடங்கி   சிறிய வருமானம் வரும் எம்மவர்களின் தொழில் துறைகள் தான் அங்கே முழுவதும் இருக்கின்றன. இக்கண்காட்சிக்கு செல்லும் எம்மவர்கள் ஆரம்பநிலையில் உள்ள எம்மக்களின் உற்பத்தியை வாங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
ஆனால் சிங்களவர்களின் தொழில் துறைகள் பன்மடங்கு வளர்ச்சியடைந்துள்ள நிலையில் அவர்களின் வியாபாரத்தை இன்னும் மேம்படுத்தும் நோக்கிலும் தான் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தெளிவாக தெரிகிறது. வேண்டுமென்றால் கண்காட்சி முடிந்ததும் ஏற்பாட்டாளர்கள் புள்ளிவிபரங்களை எடுத்துப் பார்த்தால் தெரிய வரும்.  வருடாந்தம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சர்வதேச வர்த்தக சந்தை போல் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கொள்ளை இலாபம் சிங்களவர்களுக்கே..
நன்றி :- செ.கிரிஷாந்த்.

Recommended For You

About the Author: ஈழவன்