கத்தி முனையில் மாணவியை கடத்த முயற்சி!

கன்னியாகுமரி மாவட்டம், இரணியலில் பள்ளி ஆசிரியரை கத்தியைக் காட்டி மிரட்டி மாணவியை கடத்த முயற்சித்த இளைஞரை பொது மக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.

கருங்கல் பகுதியைச் சேர்ந்த 15 வயதான மாணவி, இரணியல் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

இந்நிலையில், ராஜபாளையம் இந்திரா காலணி பகுதியை சேர்ந்த 23 வயதான ஜெயராம் நேற்று தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளான்.

அங்கிருந்த ஆசிரியரிடம் மாணவியின் பெயரை சொல்லி, அவரது தந்தை இறந்து விட்டதாகவும், ஆகவே அவரை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுள்ளான். இதில் சந்தேகமடைந்த ஆசிரியர், மாணவியை அனுப்ப மறுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை ஆசிரியரின் கழுத்தில் வைத்து ஜெயராம் மிரட்டியுள்ளான். ஆசிரியர் சத்தம் போடவே ஜெயராம் அங்கிருந்து தப்பியோட முயன்றான்.

அப்போது ரோட்டில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து விசாரித்தனர். அதில் மாணவியை அழைத்துச செல்ல வந்ததாக ஜெயராம் கூறியுள்ளான்.

மேலும், பேஸ்புக் மூலம் மாணவியுடன் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து ஏற்கனவே அவரைக் கடந்த ஜூன் மாதம் கடத்திச் சென்று கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் 5 நாள்கள் குடும்பம் நடத்தியது, பிறகு போலீஸாரிடம் சிக்கி போக்சோ சட்டத்தில் கைதாகி சிறை சென்று நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தது ஆகிய தகவலையும் தெரிவித்தான்.

இதனையடுத்து ஜெயராமை, அவன் கொண்டுவந்த இருசக்கர வாகனம் மற்றும் கத்தியுடன் இரணியல் போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜெயராம் மீது வழக்கு பதிவு செய்து அவரை மீண்டும் இரணியல் போலீசார் சிறையிலடைத்தனர்.


Recommended For You

About the Author: Editor