அமெரிக்க எல்லை சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வீதம் குறைவு!!

மெக்ஸிக்கோ – அமெரிக்க எல்லை ஊடாக அமெரிக்காவிற்குள் நுழையும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையில் 56 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மெக்ஸிக்கோ தெரிவித்துள்ளது.

எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தியதன் விளைவாகவே கடந்த மே மாதத்திற்கு பின்னர் இவ்வாறான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மெக்ஸிக்கோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த தகவலை நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மெக்ஸிக்கோவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மார்செலோ எப்ரெட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மற்றும் மெக்ஸிக்கோ இடையே கடந்த ஜூன் மாதம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட 90 நாள் உடன்பாட்டின் படி சட்டவிரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவிற்குள் நுழைவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத குடியேற்றவாசிகள் விடயத்தில் மெக்ஸிக்கோ சரியான நடவடிக்கையை முன்னெடுக்காவிட்டால், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதனையடுத்தே மெக்ஸிக்கோவினால் இந்த எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மெக்ஸிக்கோவால் முன்னெடுக்கபட்டிருக்கும் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மெக்ஸிக்கோவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உட்பட ஒரு உயர்மட்டக்குழு விரைவில் வொஷிங்டன் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor