ஹெல்மெட் அணிவதால் கழுத்துவலியா?

சாலை விபத்துகளில் அதிகளவு உயிரிழப்பு ஏற்படுவதற்கு ஹெல்மெட் அணியாதது முக்கியக் காரணமாக அமைகிறது.

சமீபத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவதைச் சென்னை உயர் நீதிமன்றம் கட்டாயமாக்கியது. ஆனால், ஹெல்மெட் அணிவதால் கழுத்துவலி வருவதாகச் சிலர் அதைத் தவிர்த்து வருகின்றனர்,

இந்த நிலையில் ஹெல்மெட் போடுவதால் கழுத்துவலி ஏற்படுவது குறித்தும், வலி வராமல் தடுப்பது குறித்தும் STRENGTH INDIA MOVEMENT இயக்கத்தை நடத்தி வருபவரும், எலும்பியல் மருத்துவருமான அஷ்வின் விஜய் விளக்கமளிக்கிறார். “ஹெல்மெட் அணிவதால் கழுத்துவலி வராது. ஹெல்மெட் அணிகிற விதம் தவறாக இருந்தால் கழுத்துவலி ஏற்படலாமே தவிர, அதை அணிவதனால் கழுத்துவலி ஏற்படாது” என்கிறார்.

“ஹெல்மெட் அணியும்போது சில விஷயங்களில் நாம் கவனமாக இருந்தால் தலைவலி, கழுத்துவலி வராது. ஹெல்மெட் அணியும்போது அதில் இருக்கும் chin traps-ஐ கட்டாயமாகப் போட்டுக்கொள்ள வேண்டும். இதனால் ஹெல்மெட் அணியும்போது ஏற்படக் கூடிய அழுத்தம் ஒரே பக்கமாகப் போகாமல், கழுத்தைச் சுற்றிலும் இருக்கும். எனவே கழுத்துவலி ஏற்பட வாய்ப்பு குறைவு” என்று கூறுகிறார்.

எப்படி வாங்குவது?

“ஹெல்மெட் வாங்கும்போது தலையில் மாட்டிப் பார்த்து ஃபிட்டாக இருக்கும் வகையில் வாங்க வேண்டும். ஹெல்மெட் அணிந்த பிறகு கழுத்தைத் திருப்பி பார்க்கும்போது கழுத்தோடு சேர்த்து, ஹெல்மெட்டும் ஒரு பாகமாகத் திரும்ப வேண்டும். தலை, தாடை பகுதிகளில் ஒட்டியவாறு இருக்கக் கூடிய ஹெல்மெட்டை வாங்க வேண்டும். அதைத்தவிர்த்து தலையில் மாட்டும்போது சமமற்ற முறையில் இருக்கும் ஹெல்மெட்டை வாங்கக் கூடாது. தலை, முகத்தை முழுதாக மூடிக்கொள்ளும்படியாக இருக்கக்கூடிய ஹெல்மெட்டை வாங்க வேண்டும். அப்போதுதான் கீழே விழும்போது, முக எலும்புகளில் பாதிப்பு ஏற்படாது, 1,200 கிராம் முதல் 1,800 கிராம் வரை தான் ஹெல்மெட்டின் எடை இருக்கிறது. பெண்களுக்கான ஹெல்மெட்டுகள் 800 கிராம் எடையில் இருக்கின்றன. இதனால் பயப்படத் தேவையில்லை. இதன் மூலம் கழுத்துவலி வராது” என்று மருத்துவர் அஷ்வின் விஜய் தெரிவிக்கிறார்.

ஒரு சிலர் ஹெல்மெட் அணிந்துகொண்டு, அதற்குள் செல்போனை வைத்துப் பயன்படுத்துகின்றனர். இது விபத்துகளுக்குக் காரணமாக அமைகிறது என்று கூறும் அஷ்வின் விஜய், ஹெல்மெட்டில் முன்பகுதியில் இருக்கக் கூடிய கண்ணாடியில், டார்க் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது. டார்க் ஸ்டிக்கர் ஒட்டுவதன் மூலம் காட்டும்தன்மை பாதிக்கும். இதனாலும் விபத்துகள் அதிக அளவு ஏற்பட வாய்ப்புள்ளது. முன்னால் அமர்பவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவது அவசியம். முழு ஹெல்மெட் அணிவது முக்கியமானது என்கிறார்.


Recommended For You

About the Author: Editor