உதைபந்தாட்ட போட்டியில் யாழ்.பல்கலைக்கு அநீதி – மாணவர் ஒன்றியம்!!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் யாழ். பல்கலைக்கழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளளதுடன் தமக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் குறித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் பல்கலைக்கழக உதைபந்தாட்ட தலைவர் உள்ளிட்ட வீரர்களும் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் இணைந்து ஊடக சந்திப்பொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தியிருந்தனர்.

இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இதன்போது அவர்கள் கூறுகையில், “பல்கலைக் கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி கொத்தலாவலவில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் போட்டியில் மொரட்டுவ பல்கலைக்கழகமும் யாழ். பல்கலைக் கழகமும் மோதின.

இதன்போது எமது அணியின் உப தலைவர் காயமடைந்ததுடன் மழையும் குறிக்கிட்டதால் போட்டியில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து பின்னர் போட்டி வைக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் போட்டி நடத்த முடியாது எனக் கூறி எமது பல்கலைக்கழகம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு வீர்ர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது இரண்டு பல்கலைக் கழகங்களும் இணை சம்பியன் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு எமக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது எமக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே நாம் பார்க்கிறோம். ஆகவே எங்களால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது” எனத் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர், “பல்கலைக் கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டியில் எமது பல்கலைக் கழக அணியே பல வெற்றிகளைப் பெற்று வந்தது. அதேபோன்று இந்த முறையும் எமது அணி வெற்றி பெற்றதாக அறிவுக்கப்பட்டு இப்போது இணை சம்பியின் என்று கூறுவதை ஏற்க முடியாது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

தோல்வியை கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அநீதியை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே இந்த விடயத்தில் உரிய தரப்பினர்கள் கரிசனை கொண்டு சரியான நீதியை பெற்றுத்தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.


Recommended For You

About the Author: Editor