மதுரை பள்ளியில் மாணவி தற்கொலை!

மதுரையில் தனியார் பள்ளி வகுப்பறையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கே.புதூர், காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து. கொத்தனார் வேலை பார்த்து வருகிறார், இவரது மனைவி சுந்தரி. இவர்களது இரண்டாவது மகள் அர்ச்சனா(16).

அப்பகுதியில் உள்ள லூர்து அன்னை மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வந்தார். வழக்கம் போல் இன்று (செப்டம்பர் 6) அர்ச்சனா பள்ளிக்குச் சென்றுள்ளார்.

பள்ளி நேரத்துக்கு முன்பே பள்ளிக்குச் சென்ற அர்ச்சனா காலை 8 மணியளவில் தனது வகுப்பறையிலேயே தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

வீட்டில் இருந்து மறைத்து எடுத்து வந்த சேலை மூலம் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அர்ச்சனா.

காலை 8.45 மணியளவில் வகுப்பறைக்கு வந்த சக மாணவிகள் வகுப்பறையில் கதவுகள் மூடியிருந்ததால் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துள்ளனர்.

அப்போது அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்திருக்கிறது, இதைக்கண்ட மாணவர்கள் பள்ளி நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் பள்ளி நிர்வாகம் அர்ச்சனாவின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளது.

தகவலறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர் அர்ச்சனாவின் உடலைப் பார்த்துக் கதறி அழுதனர்.

சிறிது நேரத்திலேயே அவரது உறவினர் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளி முன்பு திரண்டதால் அங்குப் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

பள்ளியில் தற்கொலை செய்து கொண்டதால். அவரது மரணம் குறித்துப் பெற்றோர்கள் நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பள்ளியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்,

அப்போது உறவினர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கே.புதூர் போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அர்ச்சனாவின் தற்கொலைக்கான காரணம் குறித்துப் பெற்றோர் ,பள்ளி ஆசிரியர்கள், சக மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் பள்ளி நிர்வாகம் மீது புகார் தெரிவிக்கும் நிலையில், கடந்த ஒரு வாரமாக அர்ச்சனா பள்ளிக்கு வரவில்லை. ஒரு வாரத்துக்கு பிறகு இன்றுதான் வந்துள்ளார். அதனால் அர்ச்சனாவுக்கு வீட்டில் எதாவது பிரச்சினை இருந்திருக்கலாம் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,


Recommended For You

About the Author: Editor