அவுஸ்திரேலிய தமிழ் குடும்பம் தொடர்பில் திடீர் திருப்பம்!!

அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ள தமிழ் குடும்பம் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கத்தினால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

பிரியா – நடேசலிங்கம் குடும்பம் நாடு கடத்தப்பட்டாலும் மீண்டும் அவுஸ்திரேலியா வருவதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களே என அந்நாட்டு உள்விவகார அமைச்சர் பீட்டர் டட்டன் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரியா நடேசலிங்கம் குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்த முற்பட்ட நிலையில் அவர்களது புகலிட கோரிக்கை தொடர்பான மேல்முறையீடு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்களை நாடுகடத்தும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்நிலையிலேயே உள்விவகார அமைச்சர் பீட்டர் டட்டன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘வெளிநாட்டிலுள்ள எவரும் குறிப்பிட்ட வீசாவிற்கு விண்ணப்பம் செய்யலாம். எனவே, நாடு கடத்தப்பட்ட பின்னர் குறித்த குடும்பத்தினர் வீசாவின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மீண்டும் அவுஸ்திரேலியவுக்கு வர வாய்ப்புள்ளது.

வழக்கமான விண்ணப்ப பரிசீலனைகள் நடைமுறையில் இருக்கும், இந்த குடும்பமும் ஆயிரக்கணக்கான மக்கள் செய்வது போல, நாட்டுக்கு வெளியிலிருந்து விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்’ என உள்விவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை குறித்த குடும்பத்தினரின் வழக்கு இன்று நீதி மன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் விசாரணையை நடத்த கால அவகாசம் தேவை என தெரிவித்து நீதிமன்றம் வழக்கை 12 நாட்கள் ஒத்தி வைத்துள்ளது.


Recommended For You

About the Author: Editor