மலிங்கவின் சாதனையால், இலங்கை வென்றது.

நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான T-20 போட்டியில் இலங்கை அணி 37 ஓட்டங்களால் வெற்றியைப் பெற்றுள்ளது.

இதேவேளை, இப்போட்டியில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க T-20 வரலாற்றில் புதிய சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

லசித் மாலிங்க முதல் மூன்று ஓவர்களில் 5 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணிக்கும் மற்றும் இலங்கை அணிக்கும் இடையிலான 3 ஆவது T-20 போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் இலங்கை அணி நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன் போது , இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஸ்க தகுணதிலக 30 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் மிற்சல் சான்டனர் மற்றும் ரோட் அஸ்ரில் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

126 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என  பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி லசித் மாலிங்கவின் பந்து வீச்சுக்கு தடுமாறி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

முதல் 6 ஓவர்களில் நியூஸிலாந்து 33 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதன்போது மூன்றாவது ஓவரில் லசித் மாலிங்க கடைசி 4 பந்துகளில் தொடர்ந்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் நியூஸிலாந்து அணி 16 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 88 ஓட்டங்களைப் பெற்று 37 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

நியூஸிலாந்து அணி சார்பாக ரிம் சௌதீ 28 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் மலிங்க 5 விக்கெட்டுக்களையும் அகில தனஞ்சய 2 விக்கெட்டுகளையும், லக்ஷன் சந்தகன் மற்றும் வனிது ஹசரங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

மூன்று போட்டிகளைக் கொண்ட T-20 தொடரை நியூஸிலாந்து அணி கைப்பற்றியுள்ள போதும் இலங்கை அணி இறுதிப் போட்டியை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்