தமிழ் தலைமைகளுக்கு பணம் தான் இலக்கு!!

இலங்கையின் அரசியல் நிலைமையை தீர்மானிப்பவர்களாக பௌத்த மதகுருமார் விளங்குவதாக வடக்கு மாகாண முன்னாள் மகளிர் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தமிழ் தலைமைகள் இனத்தின் நலன் சார்ந்து செயற்படுவதில்லையென்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்னொன் வடக்கு மாகாண முன்னாள் மகளிர் அமைச்சர் அனந்தி சசிதரனை இன்று (வியாழக்கிழமை) சந்தித்தார்.

இந்த சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் கிளிநாச்சி சோலைவனம் ஹோட்டலில் இடம்பெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் தலைமைகள் இதுவரையில் தமிழர்களுக்காக உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்து சர்வதேசத்திற்கு உண்மையை வெளிப்படுத்த முடியாதவர்களாக உள்ளனர்.

ஆனால், ஒரேயொரு பௌத்த மதகுரு தற்போது அரசியலில் தனது ஆதிக்கத்தை எவ்வாறு காண்பித்தாரென்பதை நாம் அறிவோம்.

இஸ்லாமிய தலைவர்களிடம் தமிழ் அரசியல் தலைமைகள் இன ஒற்றுமை உள்ளிட்ட பல விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

முஸ்லிம் தலைமைகளின் தீர்மானங்கள் அவர்களின் இனத்தின் நலன் சார்ந்ததாகவே அமைந்தது.

ஆனால் எமது தலைவர்கள் அவ்வாறு இனத்தின் நலன் சார்ந்து செயற்படுவதில்லை” என அவர் குற்றம்சாட்டினார்.


Recommended For You

About the Author: Editor