மாமல்லபுரத்தில் அடிப்படை வசதிகள்: நீதிமன்றம் கேள்வி!

மாமல்லபுரத்தில் உரிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 4) உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் உலக அளவில் முக்கியமான சுற்றுலா தலமாகும். வெளிநாடு சுற்றுலா பயணிகள் உட்பட ஒருநாளைக்குப் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தருவர்.
இந்தநிலையில் மாமல்லபுரத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கிட்டு என்பவர் தாக்கல் செய்த மனுவில், ”உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்துக்குச் செல்வதற்கு பல்வேறு இடங்களில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நுழைவு கட்டணம் வசூலித்தாலும் அதற்கு ஏற்றவாறு அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை.
வாகன நிறுத்துமிடம், கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். வாகன திருட்டும் நடைபெறுகிறது’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு இன்று (செப்டம்பர் 4) நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாமல்லபுரத்துக்கு உரிய வசதிகள் ஏற்படுத்தித் தராதது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனுதாரரின் புகார் குறித்து 6 வாரத்துக்குள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு உத்தரவிட்டனர்.

Recommended For You

About the Author: Editor