மக்களை மிரட்டும் மஞ்சள் பிசாசு!

தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் முப்பதாயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.
தங்கத்தின் விலை தினம்தினம் அதிகரித்துவந்தாலும் நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவிவரும் நிலையில் கடந்த ஒரு மாதமாக விலை அதிவேகத்தில் உயர்ந்துவருகிறது.
நேற்று மாலை நேர நிலவரப்படி, சவரனுக்கு ரூ.216 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 729க்கும், ஒரு சவரன் ரூ.29 ஆயிரத்து 832க்கும் விற்பனை ஆனது. இன்று காலைநேர நிலவரப்படி, ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,765க்கும், சவரன் ரூ.288 உயர்ந்து ரூ.30 ஆயிரத்து 120க்கும், விற்பனையாகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.2.60 காசுகள் உயர்ந்து ரூ.55.20க்கு விற்பனையாகிறது.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஒரு பவுன் 26 ஆயிரத்து 480 ரூபாயாக இருந்த ஆபரண தங்கம் விலை, இன்று 30 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு மாத காலத்தில் சுமார் 4 ஆயிரம் ரூபாய் அதிகரித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விலை உயர்வு ஒட்டு மொத்த இந்தியப் பொருளாதாரத்திலிருந்து சாமானியர்கள் வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்காக ஆறு மாதங்களுக்கு முன்பாகவே நகை வாங்குவதை மக்கள் தொடங்கிவிடுவார்கள்.
தை, மாசி, பங்குனி, சித்திரை ஆகிய நான்கு மாதங்கள் அதிக முகூர்த்தங்கள் உள்ள மாதங்களாகும். அதற்காக தற்போது ஆவணியிலே நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மார்கழியில் தங்க நகை வாங்குவதை பெரும்பாலும் தவிர்த்துவிடுவர்.
இந்நிலையில் மக்கள் தங்க நகை வாங்கும் நேரத்தில் இந்த விலை உயர்வு சாமானியர்களின் குடும்பங்களில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
கார்ல் மார்க்ஸ் 150 வருடங்களுக்கு முன்பாக தங்கத்தை பற்றிக் குறிப்பிடும் போது ‘மஞ்சள் பிசாசு’ என்று அழைத்தார். இன்றும்கூட அந்த பெயர் சரியாக பொருந்துகிறது.

Recommended For You

About the Author: Editor