மூளைச் சாவு அடைந்த பெண்ணுக்குப் பிறந்த குழந்தை!

செக் குடியரசில் 117 நாட்களுக்கு முன்பு மூளைச் சாவு அடைந்த, பெண் ஒருவருக்குக் குழந்தை பிறந்தது மருத்துவ வரலாற்றில் இடம் பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது.
செக் குடியரசு நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் ப்ரோனோ பல்கலைக்கழக மருத்துவமனையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, சுயநினைவு இன்றி கர்ப்பிணி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் 15வாரம் கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
27வயதான அந்த பெண் மூளைச் சாவு அடைந்தது தெரியவந்துள்ளது. எனினும் வயிற்றில் இருக்கும் குழந்தையைக் காப்பாற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
பல்வேறு செயற்கை உபகரணங்களுடன் மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சைகள் அளித்தனர். இயந்திர வசதிகள் கொண்டு அப்பெண்ணின் கால்களுக்கு நடைப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
உணர்வற்ற நிலையில் இருக்கும் அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண், மூளைச் சாவு அடைந்தும் மருத்துவர்கள் உதவியுடன் 117 நாட்கள், தனது கருவை வயிற்றில் சுமந்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது.
2.13 கிலோ எடையுடன் பிறந்த பெண் குழந்தை அப்பெண்ணின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை பிறந்தவுடன் அந்த பெண்ணுக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாச கருவிகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டதால் அந்த பெண் மரணம் அடைந்தார்.
குழந்தை பிறந்தது ஒரு பக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மறுபக்கம் அப்பெண் இறந்தது அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூளைச் சாவு அடைந்த பெண்ணுக்குச் சிகிச்சை அளித்து, குழந்தை பிறக்க வைத்த மருத்துவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Recommended For You

About the Author: Editor