ராமர் – சஞ்சனா: ஃபேன்டஸி கூட்டணி!

விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ராமர் தற்போது அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றுவருகிறார். காமெடி நடிகராக வலம்வரும் இவர், கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார்.
அறிமுக இயக்குநர் மணி ராம் இயக்கும் படத்தில் ராமர் கதாநாயகனாக நடிக்க, சஞ்சனா கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார். சமீர் பரத்ராம் தயாரிக்கிறார்.
படம் குறித்து பேசிய சமீர் பரத்ராம், “மணி ராம் அமெரிக்காவைச் சேர்ந்தவர். நாளைய இயக்குநர் 4ஆவது சீசனில் இறுதிச்சுற்றுவரை வந்தவர். இந்தப் படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற கலைஞர்களை அதிகளவில் உள்ளடக்கிய பொழுதுபோக்கு படமாக அமையும்.
குறிப்பாக குழந்தைகளைக் குறிவைத்து உருவாக்கப்படுகிறது. ஃபேன்டஸி காமெடி பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் நிறைய கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம்பெறவுள்ளன” என்று கூறினார்.
இன்னும் ஒரு வாரக் காலத்திற்குள் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விஜய் டிவியிலிருந்து ஏற்கெனவே சந்தானம், சிவகார்த்திகேயன், மாகாபா ஆனந்த் ஆகியோர் காமெடி நடிகர்களாக அறிமுகமாகி கதாநாயகர்களாக வலம்வரும் நிலையில் அந்தப் பட்டியலில் ராமரும் இடம்பிடித்துள்ளார்.
ராமர் இதுதவிர கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் அஞ்சலி நடிக்கவுள்ள புதிய படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடிக்கவுள்ளார்.

Recommended For You

About the Author: Editor