காலிஃப்ளவர் தண்டு ஊறுகாய்!

அழகுக்காகப் பெயர் பெற்றவை பூக்கள். அந்தப் பூக்களில் சுவைமிக்கது காலிஃப்ளவர். இது காலிஃப்ளவர் சீஸன்.

பார்த்தாலே வாங்கத் தூண்டும் வகையில் கண்கவரும் காலிஃப்ளவர்கள் அளவிலும் பெரிதாகக் கிடைக்கின்றன.

வெண்மை அல்லது இளம் மஞ்சளாகக் காணப்படும் காலிஃப்ளவருக்கு மருத்துவக் குணங்களும் உண்டு. பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சத்துகளும் உண்டு. இதயத்துக்கு இதமானது இது. புற்றுநோயைத் தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு என சில ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

பெரும்பாலோர் பூக்களை மட்டும் பயன்படுத்திவிட்டு, தண்டுகளை ஒதுக்கிவிடுவார்கள். அந்த தண்டிலிருந்து நாவுக்குச் சுவையான ஊறுகாய் தயாரிக்கலாம்.

என்ன தேவை?
காலிஃப்ளவர் தண்டுகள் – ஒரு கப்

மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

கடுகுப் பொடி – ஒரு டீஸ்பூன்

வெந்தயப் பொடி – அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்

எண்ணெய் – அரை கப்

பூண்டு – 6 பல்

உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?

காலிஃப்ளவர் தண்டுகளை நன்கு கழுவி, பேப்பர் டவல்கொண்டு ஈரத்தை ஒத்தி எடுக்கவும். பிறகு, நீளமான மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். காற்றுப்புகாத ஜாடியில் காலிஃப்ளவர் துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு பூண்டு சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் பெருங்காயத்தூள், கடுகுப் பொடி, வெந்தயப் பொடி, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ஆறிய பிறகு பூண்டுக் கலவையை ஊறிய காலிஃப்ளவருடன் சேர்த்துக் கலக்கவும். தேவையானால் மேலும் சிறிதளவு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இதை மூடி, ஃப்ரிட்ஜில் வைத்து நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.


Recommended For You

About the Author: Editor