ஒபந்தம் மீறப்பட்டதால், 4 பில்லியன் நஷ்டம்

ஸ்மார்ட் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கிய ஒப்பந்தத்தை நீடிப்பதற்கு மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களம் எடுத்த தீர்மானத்தின் காரணமாக அரசாங்கத்துக்கு 4பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக பொதுக் கணக்குகள் குழுவின் விசாரணைகளில் தெரியவந்தது.

இத் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஏழு வருட ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் மேலும் இரண்டு வருடங்கள் அந்த ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்குப் பாரிய நஷ்டம் ஏற்பட்டிருப்பது நேற்றைய விசாரணைகளில் வெளியானது.

மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களம் தனியார் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் 2016ஆம் ஆண்டு முடிவடைந்துள்ளது. இவ் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு அமைய ஸ்மார்ட் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் தயாரிக்கும் இயந்திரங்களை அந்த நிறுவனம், மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களத்திடம் மீள ஒப்படைக்க வேண்டும்.

அதன் பின்னர் திணைக்களம் தொடர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும். இயந்திரங்களை கையளிப்பதற்குப் பதிலாக இந் நிறுவனம் ஒப்பந்தத்தை நீடித்து இயந்திரங்களைத் தொடர்ந்தும் வைத்துள்ளது. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டதற்கமைய செயற்பட்டிருந்தால் திணைக்களத்துக்கு மாதமொன்றுக்கு 120மில்லியன் ரூபா வருமானம் கிடைத்திருக்கும் என்றும் விசாரணைகளில் சுட்டிக்காட்டப்பட்டது.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தால் மாதமொன்றுக்கு 60ஆயிரம் முதல் 70ஆயிரம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஓகஸ்ட் மாதத்தில் 92ஆயிரம் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது.

ஒரு விண்ணப்பதாரியிடமிருந்து 1,700ரூபா அறவிடப்படும் நிலையில், தனியார் நிறுவனம் 1,340ரூபாவைப் பெற்றுக்கொண்டு 360ரூபாவையே அரசாங்கத்துக்கு வழங்கியிருப்பதாக மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களம் சுட்டிக்காட்டியது.

தனியார் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகின்றபோதும் அவர்களுக்கு வழங்கப்பட்ட இலக்குக்கு அமைய வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கவில்லையென்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஏழு வருட ஒப்பந்தகாலம் முடிவடையும்போது தனியார் நிறுவனம், மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு தொழில்நுட்பத்தை வழங்குவதுடன் அதற்கான பயிற்சிகளையும் வழங்க வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் முடிவடைந்து இரண்டரை வருடங்கள் ஆகியுள்ளபோதும் அந்நிறுவனம் இன்னமும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லையென அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்மார்ட் சாரதி அனுமதிப்பத்திரம் விநியோகிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடமிருந்து உடனடியாகத் திணைக்களம் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுக் கணக்குகள் குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண எம்பி மற்றும் கணக்காய்வாளர் நாயகம் ஆகியோர், மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களம் மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஆகியோருக்குப் பணிப்புரை விடுத்தனர்.


Recommended For You

About the Author: ஈழவன்