வீட்டு திட்ட குறைபாடுகள் உடன் நிவர்த்தி செய்யப்படும்

வடக்கில் வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அவை தொடர்பில் கவனம் செலுத்துவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உறுதியளித்தார்.

பிரதமர் கேள்வி நேரத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த உறுதிமொழியை வழங்கினார். வீடமைப்பு நிர்மானத்துறைகள் மற்றும் கலாசார அமைச்சின் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட மாதிரிக் கிராமத் திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டபோதும் வீடுகளைப் பூர்த்தியாக்கியமைக்கான முழுப் பணமும் பயனாளர்களுக்கு வழங்கப்படவில்லையென சார்ள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டினார்.

வீடமைப்பு அதிகார சபையினால் 2018ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 5இலட்சம் ரூபா வீடமைப்பு திட்டத்தில் 2இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டுள்ளது. இன்று பல திட்டங்களுக்கு எந்தவித பணமும் கொடுக்கப்படுவதில்லை. மக்கள் மேலதிகமாக செலவழிக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக பயனாளர்களுக்கு குறிப்பிட்ட பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. தமக்கான விளம்பரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த வீட்டுத் திட்டங்களை ஆரம்பித்தார்களா என்ற சந்தேகம் உள்ளது என்றார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், வீடமைப்பு மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நாடு பூராகவும் ஏனைய பிரதேசங்களில் முன்னெடுக்கப்படுவதை போன்று வடக்கிலும் மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்பட்டன.

2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் வரையிலான காலப் பகுதியில் 18கிராமங்களில் 407வீடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஏதாவது குறைபாடுகள் இருப்பது குறித்து தனக்குத் தெரியப்படுத்தினால் அதுபற்றிக் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்