யாழில் சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம்!!

சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனத்தை மீள்பரிசீலணை செய்து வழங்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் உள்ள சுகாதாரத் தொண்டர்கள், இன்று (புதன்கிழமை) காலை இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டத்தின்போது, கைதடியில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

சுகாதார தொண்டர்களுக்கான நியமனங்கள் ஓரிரு தினங்களில் வழங்கப்படவுள்ள நிலையில், கடந்த காலங்களில் சுகாதார தொண்டர்களாக கடமையாற்றிய 900 பேர், இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, 1990ஆம் ஆண்டிலிருந்து கடமையாற்றிய சுகாதார தொண்டர்களை உள்வாங்காது, புதிதாக தெரிவு செய்யப்பட்ட சுகாதார தொண்டர்களை உள்வாங்குவதாக அவர்கள் குற்றம் சுமத்தினர். அத்தோடு, நேர்முகத் தேர்வில்கூட தம்மை தெரிவு செய்யவில்லை என்றும் சுகாதாரத் தொண்டர்கள் சாடினர்.

எனவே பல ஆண்டுகளாக சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றிய தமக்கு நியமனம் வழங்க கோரி பாதிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.


Recommended For You

About the Author: Editor